ராஜஸ்தான் சட்டப்பேரவையில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் அசோக் கெலாட் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஜெய்பூர்,
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கும் துணை முதல் மந்திரியாக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சச்சின் பைலட் டெல்லி அருகே உள்ள முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில், சச்சின் பைலட் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ளவும் அசோக் கெலாட் அரசு முயற்சித்து வருகிறது. சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக சச்சின் பைலட் தரப்பினர் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, வரும் செவ்வாய்க்கிழமை வரை சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, ஆளும் காங்கிரசின் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் போர் கொடியை உயர்த்தியதையடுத்து காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த இரண்டு பிராந்திய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் காங்கிரசுக்கான தங்களது ஆதரவினை திரும்பப்பெற்றனர். இந்நிலையில் மீண்டும் அவர்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டம் நடத்த முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை நேற்று சந்தித்த முதல்வர் அசோக் கெலாட், அடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தினை கூட்ட விரும்புவதாக ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிய வருகின்றது. சபாநாயகர் அனுப்பிய தகுதிநீக்க நோட்டீஸ் தொடர்பாக சச்சின் பைலட் தரப்பு தாக்கல் செய்த மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பின்னர், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகுதான் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் அழைப்பு விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.