ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.

மெல்போர்ன்,
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மெல்போர்னில் மட்டும் கடந்த ஜூலை 9ம் தேதி முதல் ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. அரசின் நடவடிக்கைகளை மீறுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து, தலைநகா் மெல்போர்ன் மற்றும் புகா் பகுதிகளிலும், அருகிலுள்ள மிட்ஷெல் பகுதியிலும் பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட உள்ளது. இதுதொடா்பாக வெளியாகியுள்ள உத்தரவில், அத்தியாவசியப் பொருள்களை வாங்கவும், உடற்பயிற்சி செய்வதற்காகவும் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே வருவோர் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விக்டோரியா பிரீமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் கூறியதாவது:-
மெல்போர்னில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். உத்தரவை மீறுபவர்களுக்கு 140 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,400) அபராதம் விதிக்கப்படும். விக்டோரியா மாகாணம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் நீண்ட காலத்திற்கு முகக்கவசம் அணிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய்க்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், பாதுகாப்புக்காக முகக்கவசம் அணிவது எளிதான விஷயம் என்றும் அவர் கூறினார்.