சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

டமாஸ்கஸ்,
சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதனால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது. இந்த சூழலில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசும் சிரியாவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் 250 இடங்களைக் கொண்ட சிரியா நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி தேர்தல் நடக்க இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சிரியாவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நேற்று அங்கு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது.
மக்கள் வாக்களிப்பதற்காக நாடு முழுவதும் 7 ஆயிரத்து 331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணிக்கு முடிவடைந்தது. மொத்தமுள்ள 250 இடங்களுக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,660 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய முற்போக்கு முன்னணி கட்சி 200 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் அந்த கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.