வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகளை நடத்தும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் விசாவை ரத்து செய்யும் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி டிரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு கோர்ட்டு அழைப்பு விடுத்திருந்த நிலையில், வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிரான இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. இது அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்களின் சார்பாக ஒரு புதிய வெற்றியைப் பெற்றிருந்தாலும், டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் உலகின் தலை சிறந்த அறிஞர்களை உருவாக்கும் இடம் என்ற நற்பெயரை அமெரிக்கா இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் கவலை தெரிவித்துள்ளன.
குடியேற்றத்தை தடுப்பதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்காவில் வரவேற்பு இல்லை என்ற செய்தி அனுப்பியுள்ளதாக அமெரிக்க பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் கூறுகின்றனர்.
2016-ல் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் புதிய வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதிகளவில் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்க முன்வரும் நிலையில், அமெரிக்கா பின்னோக்கி செல்லும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.