சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 140 பேர் பலியாகி உள்ளனர்.

பீஜிங்,
சீனாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்துக்கு 140 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மழை வெள்ளத்தை வெளியேற்ற அணை ஒன்றை அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர்.
சீனாவில் கடந்த மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உன்னான், குவாங்ஜி, திபெத், குய்சோவ், அன்குய், ஜிலின், லியானிங் உள்ளிட்ட பிராந்தியங்கள் இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக விட்டு விட்டு கனமழை பெய்வதால் 400-க்கும் மேற்பட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஆசியாவிலேயே மிக நீளமான யாங்சி நதி உள்ளிட்ட பல நதிகளில் வெள்ளம் பல அடிக்கு மேலே கரைபுரண்டு ஓடுகிறது.
யாங்சி நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள மிகப்பெரிய அணையான த்ரீ கோர்ஜஸ் அணையில் வழக்கமான அளவை விட 15 மீட்டருக்கு மேல் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. எனவே கடந்த வாரம் அணை திறக்கப்பட்டது. இதனால் யாங்சி நதியில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதைப்போல அன்குய் மாகாணத்தில் யாங்சி நதியின் கிளை நதிகளில் ஒன்றான சுகேயின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பெரிய அணை ஒன்று நிரம்பி அருகில் உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் நதிப்படுகையில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக அந்த அணையை நேற்று அதிகாரிகள் வெடி வைத்து தகர்த்தனர். இதனால் அணை தண்ணீர் முழுவதும் சுகே ஆற்றில் பாய்ந்து செல்கிறது.
இந்த மழை மற்றும் வெள்ளத்தால் மேற்படி பிராந்தியங்களில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து முடங்கி உள்ளது. கொரோனாவில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் அவர்கள், மழை வெள்ளத்தால் மீண்டும் பெரும் துயருக்கு ஆளாகி உள்ளனர்.
இந்த மழையால் 3.78 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2.24 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து உள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து அல்லது மாயமாகி இருப்பதாக கடந்த வாரம் சீன அரசு ஊடகம் அறிவித்தது.
இதற்கிடையே நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என முன்னறிவித்துள்ள தேசிய வானிலை மையம், இதற்காக மஞ்சள் வண்ண எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. குறிப்பாக திபெத், உன்னான் உள்ளிட்ட மாகாணங்களில் 150 மி.மீ. மழை பெய்யக்கூடும் எனவும், சில இடங்களில் மணிக்கு 70 மி.மீ. மழையும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மேலும் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகள் ஏற்படும் எனவும், இதனால் மக்கள் வெளிப்புற பணிகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
ஒருபுறம் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், சீனாவின் தென் பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டி எடுக்கிறது. செஜியாங், புஜியான், ஜியாங்ஜி, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களுக்கு வெயில் தொடர்பான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
சீனாவில் கடந்த 1998-ம் ஆண்டு கன மழையும், பெருவெள்ளமும் ஏற்பட்டு இருந்தது. அந்த பேரழிவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததுடன், 30 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் நாசமாயின. அதைப்போன்ற ஒரு பேரழிவு தற்போது ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.