கொரோனாவுக்கு ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க தயார்அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Spread the love

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்க தயாராக உள்ளோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

 


நாகர்கோவில்,

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று 2-வது நாளாக குமரி மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில், கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் இந்த ஆய்வு நடந்தது.

கொரோனா பராமரிப்பு மையமான நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை முதலில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் ஆய்வு செய்தார்கள்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆயுர்வேத மருத்துவர்கள் மிகவும் ஈடுபாட்டோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள், ஆயுர்வேத மருத்துவ முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

அவர்கள் அரசுக்கு சரியான முறையில் முன்மொழிவுக்கடிதம் அனுப்பினால், உரிய விதிமுறைகளோடு பரிசோதனைக்கான அனுமதியை அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிபவர்கள், முழுவதும் கவச உடையணிந்து கொரோனா வார்டுக்கு நேரடியாக சென்று நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆஸ்பத்திரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை கண்டு பொதுமக்கள் யாரும் பதற்றமும், பீதியும் அடைய வேண்டாம். உங்களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும் தயார் நிலையில் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

குளச்சலில் மீனவ கிராமங்களை சேர்ந்த பெண்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துரையாடி, மீனவ மக்களுக்காக தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, கொரோனா நோயினால் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page