இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தாங்கள் கண்டுப்பிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

லண்டன்,
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத்தொடங்கி 7 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அதே நேரத்தில் பிற நோய்களுக்கு தரப்படுகிற சில மருந்துகளை சோதனை ரீதியில் கொரோனா நோயாளிகளுக்கு உலகமெங்கும் தருகின்றனர்.
இந்நிலையில் AstraZeneca என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த தடுப்பு மருந்துக்கு, ChAdOx1 nCoV-19 சாடாக்ஸ் ஒன் நோவல் கொரோனா வைரஸ் 19 என பெயரிடப்பட்டுள்ளது. ஆயிரத்து 77 பேரின் உடலில் செலுத்தி செய்யப்பட்ட முதல்கட்ட சோதனையில், இந்த மருந்து நல்ல பலன் கொடுத்திருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மனிதர்களின் உடலில் வைரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பு மருந்து உருவாக்கி இருப்பதாக மருத்துவ இதழான லான்செட் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திடம் ஆர்டர் கொடுத்துள்ளதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.