இந்தியர்கள் மீதான தாக்குதல் நடத்தும் நேபாளத்தின் துப்பாக்கிகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும் என சிவசேனா தெரிவித்து உள்ளது.
மும்பை,
இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த மாதம் பீகார் மாநிலம் சீதாமரி அருகே எல்லைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது, நேபாள ஆயுத போலீஸ் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். 2 பேர் காயம் அடைந்தனர்.
இந்தநிலையில், கடந்த சனிக்கிழமை நேபாள போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டிலும் இந்தியர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நேபாளத்தின் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் ஆவேசமாக கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தான் இந்த ஆண்டில் இதுவரை 2 ஆயிரத்து 700 முறை போர் நிறுத்தத்தை மீறியுள்ளது. இதன் காரணமாக 21 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 94 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இப்போது நேபாளத்தின் துப்பாக்கிகளும் அப்பாவி இந்தியர்களை கொன்று குவிக்கின்றன.
நம்மால் பாகிஸ்தானின் துப்பாக்கிகளை தடுக்க முடியவில்லை. ஆனால் நேபாளத்தையும் அதேபோல விட்டு விடக்கூடாது. நேபாள துப்பாக்கிகளின் முனைகள் இப்போதே உடைக்கப்பட வேண்டும். இல்லையெனில், பாகிஸ்தானை போல நேபாள எல்லையிலும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிரந்தர தலைவலியாக மாறி விடும்.
தற்போதைய நேபாள தாக்குதல் சம்பவங்கள் அந்த நாடு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதையே காட்டுகிறது.
தற்போது லடாக்கில் சீனா அமைதியாக உள்ளது. ஆனால் அந்த நாடு நேபாளம் மற்றும் பாகிஸ்தானின் துப்பாக்கி தோட்டாக்களை தூண்டி விடுவதன் மூலம் இந்திய எல்லைகள் அமைதியாக இல்லை என்பதை உறுதிபடுத்தும் விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறது.
ஜம்மு-காஷ்மீரின் மத்திய பகுதிகளில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஆனால் போர் நிறுத்த மீறல் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச்சூடு எப்போது நிறுத்தப்படும்?. அதை தடுப்பதில் நமது ஆட்சியாளர்கள் எப்போது வெற்றி பெறுவார்கள் என்பது கேள்வியாக இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.