நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியான 61 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது

புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியான 61 இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே பதவியேற்றிருக்க வேண்டிய நிலையில், கொரோனா காரணமாக டெல்லிக்கு போக்குவரத்து வசதி இல்லாததால் இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய நிலைக்குழு கூட்டங்கள் விரைவில் மீண்டும் நடைபெற வேண்டி உள்ளது. இதில் புதிய உறுப்பினர்கள் பலர் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மேலும் புதிய உறுப்பினர்களான திருச்சி சிவா (தி.மு.க.), கேசவராவ் (தெலுங்கான ராஷ்ட்ர சமிதி) ஆகியோர் 2 குழுக்களின் தலைவராகவும் உள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டபிறகே இந்த கூட்டங்களில் பங்கேற்க முடியும். எனவே புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க அவைத்தலைவர் வெங்கையா நாயுடு முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த உறுப்பினர்கள் இன்று (புதன்கிழமை) பதவியேற்கின்றனர். கூட்டத்தொடர் நடைபெறாத காலத்தில் மாநிலங்களவை அறையில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பது, நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.