சச்சின் பைலட்டுக்கும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், ராஜஸ்தான் சபாநாயகரின் மேல்முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்டதாலும், கொறடா உத்தரவை மீறி காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்காததாலும் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கு, “உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது?“ என்று கேட்டு சபாநாயகர் சி.பி.ஜோஷி கடந்த 16-ந் தேதி நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசுக்கு 17-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் தரப்பு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) வரை ஒத்திவைத்த நீதிபதிகள், அதுவரை தகுதி நீக்க நோட்டீஸ் மீதான நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக சபாநாயகர் சி.பி.ஜோஷி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது சபாநாயகரின் சார்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபல் வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, கட்சி அழைப்பு விடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதற்காக ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தகுதி நீக்கத்துக்கான நோட்டீஸ் அனுப்ப முடியுமா? கூட்டத்தில் பங்கேற்காததை கட்சிக்கு எதிரான நடவடிக்கை என எடுத்துக் கொள்ள முடியுமா? என்று கேள்விகள் எழுப்பியதோடு, ஜனநாயக நடைமுறையில் எதிர்ப்பு குரல்களை யாரும் அடக்க முடியாது என்று கூறினார்.
அதன்பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீசுக்கு எதிரான மனுக்களை ராஜஸ்தான் ஐகோர்ட்டு விசாரிக்க தடை கிடையாது. ஆனால் இது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவு, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வரும் மேல்முறையீட்டு மனு மீது வழங்கப்படும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக இருக்கும்.
ஜனநாயக நடைமுறைகள் தொடர்பான கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருப்பதால் இந்த வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டி உள்ளது. எனவே இந்த வழக்கு வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.