தினமும் 7 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க நடவடிக்கை இந்திய மருந்து நிறுவனம் அறிவிப்பு

Spread the love

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை, தினமும் 7 கோடி ‘டோஸ்’ அளவில் தயாரிப்போம் என்று இந்திய மருந்து நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் அறிவித்துள்ளது.

புனே,

ஓவ்வொரு நாளும் உலக நாடுகளில் புதிய உச்சத்தை தொடுகிற அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறது. உலகமெங்கும் நேற்று மதிய நிலவரப்படி 1½ கோடி பேருக்கு மேல் பாதித்துள்ள இந்த வைரஸ் தொற்று, ஏறத்தாழ 6¼ லட்சம் பேரை கொன்றிருக்கிறது.

இந்த வைரசை தடுத்து நிறுத்துவதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற மருத்துவ பரிசோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, ரூ.1000-க்கு குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய சீரம் இன்ஸ்டிடியுட் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மராட்டிய மாநிலத்தின் புனே நகரில் புதன்கிழமை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 59 ஆயிரமாக உள்ளது. மும்பையில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரமாக உளள்து. இந்த இரு நகரங்களிலும் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மராட்டிய மாநிலத்தில் பாதிப்புக்குள்ளானவர்களில் பாதி அளவினர் இருப்பார்கள்.

கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற சோதனை தளங்களாக பல்வேறு இடங்களுடன் மும்பை, புனேயையும் பட்டியலிட்டிருக்கிறோம். இந்த நகரங்களில் கொரோனா தீவிர பரவலை கொண்ட பல இடங்கள் (ஹாட்ஸ்பாட்டுகள்) உள்ளன. இது எங்கள் தடுப்பூசியின் செயல்திறனை புரிந்துகொள்ள உதவும்.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் முக்கியமான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை ஆகஸ்டு மாத வாக்கில் நடத்த இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம்.

தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, விரைவான ஒப்புதல்களை அளித்து உதவி இருக்கிறார்கள்.

நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசியை வழங்குவதில்தான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.

ஆரம்ப மற்றும் உரிம சோதனைகளின் வெற்றியைத்தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம்.

அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம்மூலம் எங்கள் நிறுவனம், 100 கோடி டோஸ்களை இந்தியாவுக்காகவும், 70 குறைந்த மற்றும் மத்திய வருமான நாடுகளுக்காகவும் தயாரிக்க முடியும்.

தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தினமும் 6 கோடி முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசிகளுடன் தயாரிப்பைத் தொடங்கும்.

எங்கள் நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல்களைப் பெற்றதும் தயாரிப்பினை தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page