தந்தையின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது – உயிரிழந்த விவசாயி முத்துவின் மகள்

Spread the love

தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி முத்துவின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது என அவரது மகள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72). விவசாயி. இவர் தனது வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, அணைக்கரை முத்துவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் உயிரிழந்த விவசாயி முத்துவின் மகள் செய்தியாளர்களிடம் பேசிய போது, தந்தையின் மரணத்துக்கு நியாயம் கிடைக்காமல், அரசின் நிவாரணத்தை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் இது போன்ற மரணங்கள் இனி நிகழாத வகையில், தமிழக அரசு இதில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page