ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

புதுடெல்லி,
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-
சமூகவலைதளங்களில் நாட்டின் நலனுக்கு எதிரான நலனுக்கு எதிரான கருத்துகளை பரப்ப வேண்டாம். கொரோனாவுக்கு எதிரான போர் முடியாததால் மக்கள் எப்போதும் முகக்கவசம் அணிய வேண்டும். அசவுகரியமாக இருந்தாலும் கொரோனாவை தடுக்க முகக்கவசம் அணிவது அவசியம். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
மாஸ்க்-ஐ அகற்ற தோன்றினால், நமது மருத்துவர்கள், செவிலியர்கள் நினைத்து பாருங்கள். நம்மை காப்பாற்ற சுகாதார பணியாளர்கள் பல மணிநேரம் முக கவசம் அணிந்து பணியாற்றுகின்றனர். முகக் கவசம் அணிவது, 6 அடி இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்ப கூடாது.
கார்கில் போர் வெற்றி தினம் இன்று – பாகிஸ்தானோடு நட்புறவையே இந்தியா விரும்பியது. ஆனால் பாகிஸ்தான் இயற்கையான குணத்தின் காரணமாக இந்தியாவை முதுகில் குத்தியது. ஒட்டுமொத்த உலகமே இந்திய வீரர்களின் திறமையையும் வீரத்தையும் பார்த்தது.
கார்கில் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கு என்னுடைய அஞ்சலி. நம் ஒவ்வொரு வார்த்தையும், செயலும் ராணுவ வீரர்களுக்கு மன உறுதியை அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
கார்கில் போரில் வெற்றிக்காக இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு சமூக வலைதளங்களிலும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.