கொரோனா ஆபத்து நீங்கவில்லை: கூடுதல் விழிப்புடன் இருக்க பிரதமர் மோடி வேண்டுகோள்

Spread the love

நாட்டின் பல பகுதிகளில் நோய்த் தொற்று வேகமாக பரவுவதால், கொரோனா ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் வானொலியில், ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் பலமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் கொரோனா பரவல் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியின் மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோனா பாதிப்பு, கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றி, வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்த நாள் (ஜூலை 26-ந் தேதி), கார்கில் போர் வெற்றி நாள். 21 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், கார்கிலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக மீட்டது. எந்த சூழ்நிலையில் கார்கில் போர் நடந்தது என்பதை இந்தியர்களால் மறக்க முடியாது.

உள்நாட்டு பிரச்சினையில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, கார்கிலை ஆக்கிரமிக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அந்த நாட்களில், பாகிஸ்தானுடன் நல்லுறவை உருவாக்க இந்தியா முயன்று வந்தது.

இந்தியா, நட்புறவுக்கு கையை நீட்டியது. ஆனால், பாகிஸ்தானோ, நமது முதுகில் குத்தியது.

கார்கிலில் உயரமானபகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமித்து இருந்தனர். சண்டையில் ஈடுபட்டபடி, கீழே இருந்து மேலே சென்று கார்கிலை மீட்க வேண்டிய துணிச்சலான காரியத்தில் இந்திய படைகள் ஈடுபட்டன. அதில், வெற்றியும் பெற்றன.

அந்த சமயத்தில், நான் கார்கிலுக்கு நேரில் சென்று, நமது வீரர்களின் வீரத்தை நேரில் காணும் பாக்கியத்தை பெற்றேன். அது, என் வாழ்நாளில் முக்கியமான நாள். இந்த கார்கில் வெற்றி நாளில் நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன்.

கொரோனாவை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாக நாம் ஒன்றுபட்டு போராடி, பல அச்சங்களை பொய்யாக்கி உள்ளோம். குணம் அடைபவர்கள் விகிதமும், பலியானோர் விகிதமும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளது. ஒருவர் உயிரிழப்பது கூட சோகமானதுதான். ஆனால், லட்சக்கணக் கான உயிர்களை நாம் காப்பாற்றி இருக்கிறோம்.

அதே சமயத்தில், கொரோனா பரவலை தடுக்க நாம் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். கொரோனா ஆபத்து இன்னும் நீங்கவில்லை. பல பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனால், நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இருந்தது போலவே, கொரோனா இன்னும் ஆபத்தானதாகவே இருப்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

ஆகவே, முழு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முக கவசம் அணிதல், 1 மீட்டர் இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி கையை கழுவுவதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல், முழு சுத்தத்தை கடைபிடித்தல் ஆகியவைதான் கொரோனாவிடம் இருந்து நம்மை காப்பாற்றும் ஆயுதங்கள் ஆகும்.

சிலர் முக கவசத்தை அசவுகரியமாக கருதுகிறார்கள். பிறருடன் உரையாடும்போது, முக கவசத்தை அகற்றிவிட விரும்புகிறார்கள். எப்போது முக கவசம் அவசியமோ, அப்போது அதை நீக்குகிறார்கள்.

முக கவசத்தை தொந்தரவாக கருத வேண்டாம். அப்படி கருதும்போது, நமது டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோரை நினைத்துப் பார்க்க

வேண்டும். அவர்கள் 8 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து முக கவசம் அணிவதுடன், நமது உயிரை காப்பாற்ற கவனமாக பணியாற்றி வருகிறார்கள்.

எனவே, நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. மற்றவர்களையும் அப்படி இருக்க விடக்கூடாது. கூடுதல் விழிப்புடன் இருக்கவேண்டும். ஒருபுறம், விழிப்புடன் கொரோனாவை எதிர்த்து போராடுவதுடன், மறுபுறம் நமது வேலைகளையும் கவனிக்க வேண்டும்.

இந்த ஆண்டு சுதந்திர தினம், கொரோனா தாக்கத்துக்கு இடையே கொண்டாடப்படுகிறது. கொரோனாவில் இருந்து விடுபட்டு, இந்தியா தற்சார்பு அடையச் செய்வோம் என்று இளைஞர்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மழை பருவத்தில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. பீகார், அசாம் போன்ற மாநிலங்கள் பெரும் கஷ்டங்களை சந்தித்து வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தேசிய பேரிடர் மீட்புப்படையும், சுய உதவிக்குழுக்களும் உதவி வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு துணை நிற்கும்.

சிக்கலான தருணங்களை சிலர் நல்ல வாய்ப்புகளாக மாற்றி வருகிறார்கள். பீகார் மாநிலத்தில் சில மகளிர் சுய உதவிக்குழுக்கள், முக கவசம் தயாரித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக வளரும் மூங்கிலை பயன்படுத்தி, தண்ணீர் பாட்டில்கள், டிபன் பாக்சை சிலர் தயாரித்து வருகிறார்கள். அவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page