மும்பை, கொல்கத்தா, நொய்டாவில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தநிலையில் ஐ.சி.எம்.ஆர். (இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்) மராட்டியத்தின் மும்பை, மேற்குவங்காளத்தின் கொல்கத்தா மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய 3 இடங்களில் அதிவிரைவு கொரோனா பரிசோதனை மையங்களை அமைத்துள்ளது.
இந்த மையங்களை காணொலி காட்சி மூலமாக பிரதமர் நரேந்திரமோடி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், முதல்-மந்திரிகள் உத்தவ்தாக்கரே (மராட்டியம்), மம்தாபானர்ஜி (மேற்குவங்காளம்), யோகி ஆதித்யநாத் (உத்தரபிரதேசம்) ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இந்த அதிவிரைவு பரிசோதனை மையங்களில் ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்றும், எச்.ஐ.வி., டெங்கு உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்படும் என்றும் பிரதமர் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.