சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்புக்கான நவீன உபகரணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினார்.
சென்னை,
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொசு உற்பத்தி தடுப்புக்கான நவீன உபகரணங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாநகராட்சி கமிஷனரிடம் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட தரமான குடிநீர் வழங்குவது தமிழக அரசின் முதன்மையான நோக்கமாகும். அதன்படி திருத்தணி நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று 2016-17-ம் ஆண்டுக்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் ரூ.109 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டிலான குடிநீர் அபிவிருத்தித் திட்டத்திற்கு தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தப்படுவதன் மூலம், திருத்தணி நகராட்சியில் வசிக்கும் சுமார் 52 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர்.
மேலும் சென்னை மாநகராட்சியின் சார்பில் திருவொற்றியூர் மண்டலம் திருவொற்றியூர் மெயின் ரோடு, தண்டையார்பேட்டை மண்டலம் வி.ஆர். நகர், திரு.வி.க. நகர் மண்டலம் புளியந்தோப்பு மற்றும் ஜி.கே.எம். காலனி, பெருங்குடி மண்டலம் மடிப்பாக்கம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடங்கள், மணலி மண்டலம் மணலி விரைவு சாலையில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட நகர்ப்புற சமுதாய மையம், ராயபுரம் மண்டலம் எழும்பூர், வேப்பேரி மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள 3 சிறப்பு காப்பகங்கள் ஆகிய சென்னை மாநகராட்சி கட்டிடங்களை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி சார்பில் 210 சிறிய குளங்கள், ஏரிகள், நீரோடைகள் ஆகியவற்றில் உள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் மிதக்கும் கழிவுகள் ஆகியவற்றை அகற்றி கொசு உற்பத்தியை தடுக்க ஒரு ‘மினி ஆம்பிபியன்’ உபகரணம், 3.5 மீட்டருக்கும் குறைவான அகலமுள்ள கால்வாய்களில் உள்ள ஆகாயத் தாமரைகள், தாவரங்கள், மிதக்கும் பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை அகற்ற ஒரு ‘ரோபோட்டிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர்’ உபகரணம், பெரிய கால்வாய்களை தொய்வின்றி தூய்மைப்படுத்தி, சுற்றுப்புறத்தை மேம்படுத்தவும், கொசு உற்பத்தியை தடுக்கும் பணியை மேற்கொள்ளவும் ஒரு ‘ஆம்பிபியன்’ உபகரணம் ஆகிய 3 உபகரணங்களை சென்னை மாநகராட்சியின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக, அந்த உபகரணங்களுக்கான சாவிகளை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷிடம் முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என். மகேஸ்வரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.