தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுவிட்டது. கடந்த 7 மாதங்களில் ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.
சென்னை,
தங்கத்தை பொறுத்தவரையில் இந்தியாவில் ஆபரண பொருளாகவும், வெளிநாடுகளில் முதலீட்டு பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பார்க்கும்போது, இந்தியாவிலும் ஆபரண பொருளாக இருந்த தங்கம், முதலீட்டு பொருளாக மாறிவிட்டதோ என நினைக்க தோன்றுகிறது. காரணம், அந்த அளவுக்கு அதன் விலை உயர்வு இருக்கிறது.
தங்கத்தின் விலை உயர்வு இந்த அளவுக்கு இருக்கும் என்று கடந்த ஆண்டுகளில் யாரும் எதிர்பார்த்து இருக்க முடியாது. ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையை முன்கூட்டியே கணிக்கும் அளவுக்கு அதன் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.5 ஆயிரம் என்று இருந்த நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரம் என்ற நிலைக்கு வந்து இருப்பது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 15 ஆண்டுகளில் தங்கம் கடந்து வந்த பாதையை பார்க்கையில் அதன் விலை உயர்வு பெருமளவில் இருப்பதை காணமுடிகிறது.
அதிலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்த இருப்பவர்களுக்கு நாளுக்கு நாள் தங்கத்தின் விலை உயருவது சற்று கலக்கத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.
வசதி படைத்தவர்களுக்கு இது பெரிய பாரமாக தெரியாவிட்டாலும், ஏழை மக்களுக்கு இந்த விலை உயர்வு தங்கம் ஒரு எட்டாக்கனியாக மாறிவிடுமோ? என்று நினைக்க தோன்றும் அளவுக்கு தான் இருந்து வருகிறது.
அந்த வகையில் தங்கம் விலை நேற்று ரூ.40 ஆயிரத்தை கடந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ.38 ஆயிரம், ரூ.39 ஆயிரம் என்ற நிலைகளை தாண்டி, தற்போது ரூ.40 ஆயிரத்தையும் கடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 904-க்கும், ஒரு பவுன் ரூ.39 ஆயிரத்து 232-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.109-ம், பவுனுக்கு ரூ.872-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 13-க்கும், ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்து 104-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 7 மாதங்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்து இருக்கிறது.
இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறுகையில், ‘வளர்ந்த நாடுகளில் வைப்பு நிதிக்கான வட்டிவிகிதம் மிகவும் குறைந்ததால், வைப்புநிதி வைத்திருப்பவர்களும், அதன்மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். மேலும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. இந்த காரணங்களினால் தான் தங்கம் விலை உயருகிறது. இனிவரக்கூடிய நாட்களிலும் உயர்ந்தே காணப்படும்’ என்றார்.
தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதன் காரணமாக தான் அதன் விலையும் உயருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி நேற்று கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் 70 ரூபாய் 90 காசுக்கும், ஒரு கிலோ ரூ.70 ஆயிரத்து 900-க்கும் விற்பனை ஆனது. கடந்த ஒருவாரத்தில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.