குரூப்-1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 துணை போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பணி நியமன ஆணையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை,
2016-2019-ம் ஆண்டுகளுக்கான குரூப்-1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள்(டி.எஸ்.பி.) 90 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
2016-2019-ம் ஆண்டுகளுக்கான போலீஸ் துணை சூப்பிரண்டு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு மூலமாக தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 14 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கும் பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
அதுபோல நெடுஞ்சாலைத் துறையில் 2018-2019 மற்றும் 2019-2020-ம் ஆண்டுகளுக்கான 105 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளின்போது, தலைமைச் செயலாளர் கே.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, தீயணைப்பு துறை இயக்குனர் சி.சைலேந்திர பாபு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் ரெ.கோதண்டராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.