அனைத்து மாவட்ட ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழ்: எடப்பாடி பழனிசாமி ஆணைகள் வழங்கினார்

Spread the love

அனைத்து மாவட்ட ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

சென்னை,

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதி சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையையும், தீயா வகுப்பினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈழுவா மற்றும் தீயா வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்ப்பதற்கு பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வரப்பெற்றன. அதை ஆய்வு செய்ததில், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, கன்னியாகுமரி மாவட்டமும், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டை வட்டமும், திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்டு தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டன.

அந்த சமஸ்தானத்தில் சலுகைகள் பெற்று வந்த சாதிகளுக்கு தமிழ்நாட்டிலும் அச்சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈழுவா வகுப்பு கன்னியாகுமரி மாவட்டத்திலும், நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை வட்டத்திலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தின் இதர பகுதிகளில் வாழும் ஈழுவா வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழ் வழங்குவது குறித்தான கோரிக்கையின் மீதும், தீயா வகுப்பினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்தான கோரிக்கையின் மீதும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அதன் பின்னர், இதனை ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் வாழும் ஈழுவா வகுப்பினருக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான ஆணையையும், தீயா வகுப்பினரை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டதற்கான ஆணையையும் தமிழ்நாடு ஈழுவா தீயா சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page