தமிழகத்தில் கொரோனா தொற்று குறையாத நிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(புதன்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது, ‘எந்தெந்த மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது? அதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது பற்றி முதல்-அமைச்சர் ஆய்வு நடத்துகிறார்.
அந்த வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடனும் இன்று காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.
ஊரடங்கு காலகட்டத்தில் மக்களுக்கு நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். அவை எந்த அளவில் மக்களிடம் சென்றுள்ளது? என்பது போன்ற விவரங்களையும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு கலெக்டரிடமும் முதல்- அமைச்சர் கேட்டறிவார்.
தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சருடன் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா வீரியம் பெற்றுள்ளது. எனவே இந்த ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. தமிழகத்தில் தொற்றை தடுக்க மாநிலம் முழுவதுமே ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடிக்க இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடந்த அனைத்து மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகுதான் ஜூலை 31-ந் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கான முடிவை அரசு எடுத்தது நினைவு கூரத்தக்கது.
மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியதன் தொடர்ச்சியாக மருத்துவ நிபுணர் குழுவுடன் நாளை (வியாழக்கிழமை) காலை, காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் நிலை மற்றும் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகள் குறித்த அறிக்கையை மருத்துவ நிபுணர் குழு அரசுக்கு அளிக்கும்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது பற்றி முடிவு எடுக்கும்போது மருத்துவக் குழுவின் பரிந்துரைகளையும் அரசு கவனத்தில் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.