ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; பஸ், ரெயில்கள் ஓடாது: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Spread the love

தமிழ்நாட்டில், ஆகஸ்டு 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகவும், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் எந்த தளர்வுகளும் கிடையாது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

சென்னை,

கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன் கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைவதாக இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியா முழுவதும், கொரோனா தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஜூலை 31-ந் தேதிவரை (இன்று) ஊரடங்கு தொடர்கிறது.

நான் நடத்திய பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுனர்கள் குழு, மூத்த அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் அடிப்படையிலும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் வரும் ஆகஸ்டு 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்டு மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (2, 9, 16, 23 மற்றும் 30-ந் தேதிகள்) எவ்வித தளர்வு களும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1-ந் தேதி (நாளை) முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, ஏற்கனவே ஊராட்சி பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்கள், அதாவது ரூ.10 ஆயிரத்துக்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவலாயங்களில் மட்டும் கலெக்டர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.

* பெரிய வழிபாட்டு தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

* குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

* அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள், பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

* ரெயில் மற்றும் விமான போக்குவரத்தை பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.

* ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் போதும், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர், சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி ‘இ-பாஸ்’ பெற வேண்டும்.

* தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ந் தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள பெரிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடுக்கும், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கும் தடை தொடரும்.

* நீலகிரி மாவட்டத்துக்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலா தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை தொடரும்.

* தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விருந்தோம்பல் சேவைகளுக்கு தடை தொடரும். என்றாலும், மருத்துவத் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் வெளி மாநிலத்தவர்களை தனிமைப்படுத்துவதற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

* வணிக வளாகங்கள் (ஷாப்பிங் மால்), பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள் இயங்க தடை தொடரும். என்றாலும், இந்நிறுவனங்கள் இணைய வழிக் கல்வி கற்றல் தொடர்வதுடன், அதனை ஊக்குவிக்கலாம்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நீடிக்கும். மெட்ரோ ரெயில், மின்சார ரெயில் ஓடாது.

* திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் தடை செய்யப்படுகின்றன.

* அனைத்து வகையான சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், சமய, கல்வி, விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு தடை நீடிக்கிறது.

* மாநிலத்துக்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கான தடை தொடரும். இந்த கட்டுப்பாடுகளில், தொற்றின் தன்மைக்கேற்றவாறு, படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும்.

அரசு ஊரடங்கை அமல்படுத்தினாலும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், இந்த நோய் பரவலை தடுக்க இயலாது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

அரசு அமல்படுத்தி வரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள நிலையில் மக்களை காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

இதனால் நோய்ப்பரவலை மேலும் கட்டுப்படுத்த இயலும். நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page