டெல்லியில் பா.ஜ.க. தலைவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் திடீர் சந்திப்பு

Spread the love

டெல்லியில் பா.ஜ.க. தலைவரை தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் நேற்று திடீரென சந்தித்து பேசினார். ஆனால், பின்னர் பேட்டியளித்த அவர், நான் பா.ஜ.க.வில் இணையவில்லை என்று கூறினார்.

 


புதுடெல்லி,

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். இவர் தி.மு.க. தலைமை நிலைய செயலாளராகவும் உள்ளார். சமீபத்தில், சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மரணம் அடைந்தார்.

அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பொறுப்பு தனக்கு கிடைக்கும் என கு.க.செல்வம் நம்பிக்கையுடன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிற்றரசு என்பவருக்கு சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாக கு.க.செல்வம் அதிருப்தியில் இருந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று டெல்லி சென்ற தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா ஆகியோர் இருந்தனர். பின்னர், வெளியே வந்த கு.க.செல்வம் நிருபர்களிடம், அவர் கூறியதாவது:-

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு மின் தூக்கி வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்தேன். பின்னர் தற்போது பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து உள்ளேன். அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் கலந்துகொள்ளும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நல்லாட்சி நடத்தும் பிரதமர் மோடியை விமர்சிக்கும் ராகுல்காந்தி உடனான தொடர்பை தி.மு.க. துண்டித்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலக வேண்டும். தி.மு.க.வில் உள்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறேன்.

தமிழ் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை மு.க.ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. இன்னும் தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவே இருக்கிறேன். நட்டாவை சந்தித்ததற்காக தி.மு.க. என் மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வில் கு.க.செல்வம் இணையவில்லை என்று கூறியதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக கூறப்படுகிறது. அவர் பா.ஜ.க.வில் இணைந்ததாக சொன்னால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ், அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோகும். எனவே, அவர் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டே, பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் செயல்படுவார் என்று தமிழக பா.ஜ.க. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page