கிருஷ்ணகிரியில் ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி ஒப்பந்த பணிக்கு தடை கேட்டு எம்.பி. வழக்கு

Spread the love

ரூ.100 கோடி மதிப்பிலான குவாரி ஒப்பந்த பணிக்கு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்புக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் எம்.பி. வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.

சென்னை,

கிருஷ்ணகிரி எம்.பி.யாக இருப்பவர் டாக்டர் ஏ.செல்லக்குமார். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருங்கல், ஜல்லி உள்ளிட்ட 18 குவாரிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை கடந்த மாதம் 6-ந்தேதி மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். அந்த அறிவிப்பில், பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசிநாள் இன்று (புதன்கிழமை) என்றும், இந்த விண்ணப்பம் நாளை (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்படும் என்றும், அப்போது ஒப்பந்த புள்ளியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் நேரடியாக வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல முடியாதநிலை உள்ளது. சிலருக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கலெக்டரின் இந்த ஒப்பந்த அறிவிப்பு உள்ளது.

ரூ.100 கோடிக்கு மேல் உள்ள இந்த ஒப்பந்த பணிகள் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பங்கேற்று, பயனடையும் வகையில் உள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். மேலும் தற்போது மத்திய அரசின் அனைத்து ஒப்பந்த நடவடிக்கைகளும் இ-டெண்டர் (மின்னணு) முறையில் உள்ளது. இந்த மின்னணு முறையை பின்பற்ற கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். அவர் கடந்த மாதம் அறிவித்த ஒப்பந்த அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக உடனே விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோரிடம் மனுதாரர் வக்கீல் முறையிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page