விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடையவேண்டும் – வெங்கையா நாயுடு வேண்டுகோள்

Spread the love

விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடையவேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

வறுமை, கல்வியறிவின்மை இல்லாத நிலையை உருவாக்கி விஞ்ஞானம், தொழில்நுட்பத்தில் புதிய உச்சத்தை அடையவேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆகஸ்டு என்ற வார்த்தைக்கு மரியாதைக்குரிய மற்றும் ஈர்க்கக்கூடியது என்பது பொருள். நவீன இந்திய வரலாற்றில் ஆகஸ்டு மாதம் முக்கியத்துவம் வாய்ந்தது. சுதந்திர போராட்டம் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கனிந்தது. அதற்கு 5 வருடங்களுக்கு முன்பாக ஆகஸ்டு 8-ந் தேதியன்று மகாத்மா காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற தெளிவான அழைப்போடு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார். கடந்த 5-ந்தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுகள் எதிர்காலத்துக்கும், நிகழ்காலத்துக்கும் சில படிப்பினைகளை வழங்கும் நீண்டகால போராட்டங்களின் சங்கமம் ஆகும்.

கலாசார ஒருமைப்பாட்டின் முக்கிய கருவியாக கோவில்கள் இருந்தன. ஆனால் அயல்நாட்டு படையெடுப்பாளர்கள் இந்த கலாசாரத்தை அழிப்பதற்கு வளைந்து கொடுத்தனர். முக்கிய கோவில்கள் தாக்கப்பட்டன, கொள்ளையடிக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவில் மீது கி.பி.1001-ல் இருந்து கி.பி.1025 வரை கஜினி முகமது ஏராளமான முறை தாக்குதல் நடத்தினார்.

சுதந்திரம் அடைந்த சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த கோவிலை கட்டுவதற்கும், மீட்டு எடுப்பதற்கும் 925 ஆண்டுகள் ஆனது. இதேபோல அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 500 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. நீண்ட காலமாக பிரிந்து கிடந்ததற்கு நாம் செலுத்திய விலை இதுவாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி இந்தியாவுக்கு பயன் அளித்ததாக சிலர் சித்தரிக்க முயற்சிக்கின்றனர். இது உண்மை இல்லை. இந்தியாவில் ஆங்கிலேயர்களை அவர்களுடைய வணிக மற்றும் நிர்வாக ரீதியான ஆதரவு நிலைபாடுகளே வழிநடத்தின.

நமது நாட்டில் உள்ள வருவாய், நமது நாட்டின் உள்ளே முதலீடு செய்யப்பட்டால் இந்தியா பொருளாதார சக்தியாக உருவெடுக்கும். கடந்த ஆயிரம் ஆண்டுகளின் அவமானகரமான அனுபவங்கள் நம்முடைய எதிர்காலத்தை வழிநடத்தும். அதில் முதல் படிப்பினை என்பது ஒன்றுபட்டாலே நாம் எழுந்து நிற்க முடியும். பிரிந்துவிட்டால் வீழ்ந்துவிடுவோம் என்பதுதான்.

ஒவ்வொரு இந்தியர்களும் தங்கள் முழு திறனை உணரவைப்பதற்கு தேவையான கருவிகளை கொண்டு, நாம் அதிகாரம் அளிக்கவேண்டும். மற்ற எல்லா அடையாளங்களையும் முறியடிக்கும் இந்திய தன்மையின் வலுவான உணர்வும், தேசிய நலனுக்கான ஆழ்ந்த அர்ப்பணிப்பும் நமது செயல்களுக்கு வழிகாட்டவேண்டும்.

தற்போதைய சூழலில் பொருளாதார சக்தியே அந்த நாட்டை பற்றி பேசவைக்கிறது. தேவையான முயற்சிகள் மூலம் நாம் பொருளாதார திறனை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், தொழில் மற்றும் மனிதவள மேம்பாட்டில் புதிய உச்சத்தை அடையவேண்டும். வறுமை மற்றும் கல்வியறிவின்மை ஆகியவை இல்லாத நிலையை உருவாக்கவேண்டும்.

சட்டமன்றங்கள், நீதிமன்றங்கள் திறமையாக செயல்பட்டு வழிகளில் வரும் தடைகளை அகற்றுவதை உறுதி செய்யவேண்டும். நாம் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை நெருங்குகிறோம். நமது குறிக்கோள் ‘செய் அல்லது செத்துமடி’ என்பதாக இருக்கவேண்டும். இது தனிநபர்கள் அனைவருக்கும், நிறுவனங்களுக்கும் பொருந்தும். நம்முடைய வலிமையை உணர்ந்து, அதனை கட்டமைத்து, ஒற்றுமை, வளமான இந்தியாவை உருவாக்க சூளுரை ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page