மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு: அழுகிய நிலையில் மேலும் 16 உடல்கள் மீட்பு – பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது

Spread the love

மூணாறு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியான மேலும் 16 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது.


மூணாறு,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை, பெட்டிமுடி மலைக்கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கயத்தாறு, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சென்னையை சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தனர்.

பெட்டிமுடி மலையில் இருந்து 1½ கிலோமீட்டர் தொலைவில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வீடுகள் இருந்தன. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் கடந்த 7-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 வீடுகள் நாசமாயின. அந்த வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த 78 பேர் உயிரோடு மண்ணில் புதைந்தனர். அவர்களில் 3 பேர் உயிர் தப்பி வெளியே வந்து விட்டனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், போலீசார் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 13 பேரை உயிருடன் மீட்டனர். மண்ணுக்குள் புதைந்து பலியான 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 2-வது நாளாக நேற்றுமுன்தினம் கொட்டும் மழையில் மீட்பு பணி நடைபெற்றது. அப்போது மண்ணுக்குள் புதைந்த கிடந்த மேலும் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கொட்டும் மழையில் 3-வது நாளாக நேற்றும் மீட்புப் பணி நடந்தது. மண்ணுக்குள் புதைந்த குடியிருப்பு பகுதியில் 2 மோப்பநாய்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய்கள் அடையாளம் காட்டிய இடங்களில், பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி 16 உடல்களை மீட்டனர். அவை, அழுகிய நிலையில் இருந்ததால் இறந்தவர்கள் யார்? என்பதை அடையாளம் காண முடியவில்லை.

இதற்கிடையே மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே உடல்களை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அந்த உடல்கள், தனித்தனியாக சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டன. அதன்பிறகு தேயிலை தோட்ட நிர்வாகம் அனுமதி அளித்த இடத்தில், 2 ராட்சத குழிகள் தோண்டப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

நிலச்சரிவின் போது 3 பேர் உயிர் தப்பினர். மீட்பு குழுவினரால் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுவரை 43 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. மீதம் உள்ள 19 பேரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. அவர்கள் மண்ணுக்குள் புதைந்து இருக்கிறார்களா? அல்லது குடியிருப்பு அருகே உள்ள கல்லார் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டர்களா? என்று தெரியவில்லை.

அவர்கள் 19 பேரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சப்படுகிறது.

இதற்கிடையே பெட்டிமுடி பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 4-வது நாளாக இன்று (திங்கட்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

ராட்சத பாறைகள் மண்ணுடன் கலந்து கிடப்பதால், வீடுகளில் சிக்கி இருப்பவர்களின் உடல்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கல்லார் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றங்கரையோரத்தில் தொடர்ந்து மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மத்திய மந்திரி முரளி ஆகியோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு நேரில் வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டனர். மேலும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினர்.

நிலச்சரிவில் சிக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர்

பெட்டிமுடி நிலச்சரிவில் சிக்கியவர்களில் 31 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

மூணாறு பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினரான பெட்டிமுடியைச் சேர்ந்த அனந்தசிவன் (வயது 58) நிலச்சரிவு ஏற்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரும், அவரது குடும்பத்தினரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். அனந்தசிவன், அவருடைய மனைவி வேலுத்தாய் (55), மகன் பாரதிராஜா (35), மருமகள் ரேகா (26) உள்பட அந்த குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தனர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தவர்களில் 19 பேர், பள்ளிக்கூட மாணவர்கள் என தெரியவந்து உள்ளது. இவர்கள், அனைவரும் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1 படித்து வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page