உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான ராணுவ தளவாடங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார்.

புதுடெல்லி,
உலகில் ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. கடந்த 8 ஆண்டுகளாக ராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.
பல்வேறு துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வகை செய்யும் ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தை சமீபத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த திட்டத்தின் கீழ், ராணுவ தளவாடங்களின் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதியை சார்ந்து இருக்காமல், உள்நாட்டிலேயே பெரும்பாலான ராணுவ தளவாடங்களை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிப்பது என்றும் மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.
இதுதொடர்பாக சமீபத்தில் ராணுவ அமைச்சகத்தின் சார்பில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் விற்றுமுதல் மதிப்புள்ள ராணுவ தளவாட கொள்முதல் வரைவு கொள்கை அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், உள்நாட்டில் ராணுவ தளவாடங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 வகையான ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் படிப்படியாக ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டுவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
பிரதமர் மோடி அறிவித்த ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உள்ள ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்க ராணுவ அமைச்சகம் தயாராகிவிட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ரூ.4 லட்சம் கோடி கொள்முதலில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு தரைப்படை மற்றும் விமானப்படைக்கும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு கடற்படைக்கும் ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்படும் என்று தனது டுவிட்டர் பதிவில் ராஜ்நாத் சிங் தெரிவித்து இருக்கிறார்.
2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டில் இதுவரை முப்படைகளுக்கும் ரூ.3½ லட்சம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்களின் பட்டியலில் பீரங்கியில் பொருத்தப்படும் துப்பாக்கிகள், தரையில் இருந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கும் குறுகிய தூர ஏவுகணைகள், கடலோர ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர்கள், ரேடார்கள், மின்னணு போர்க்கருவிகள், பயிற்சி விமானங்கள், எடைகுறைந்த ராக்கெட் லாஞ்சர்கள், ராக்கெட்டுகள், எந்திர துப்பாக்கிகள் உள்ளிட்டவை அடங்கும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பட்டியலில் உள்ள 69 வகையான ராணுவ தளவாடங்கள் மீதான இறக்குமதி தடை வருகிற டிசம்பர் மாதம் முதலும், 11 தளவாடங்கள் மீதான இறக்குமதி தடை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலும், 4 தளவாடங்கள் மீதான இறக்குமதி தடை 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலும் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.