வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிதியத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.

புதுடெல்லி,
கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில்துறை மீண்டு எழுவதற்காக, மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்புள்ள பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்தது. அந்த திட்டங்களில் ஒன்று, வேளாண் உள்கட்டமைப்பு நிதியம் ஆகும்.
இந்த நிதியம் அமைக்க கடந்த மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் நடந்த கூட்டத்தில் அவர் இதை தொடங்கி வைத்தார்.
இந்த நிதியத்தின் கீழ், தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், விவசாய அமைப்புகள், விவசாய உற்பத்தி அமைப்புகள், வேளாண் தொழில்முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு 4 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி கடன் வழங்கப்படும்.
11 பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் வழங்குவதற்காக, அவ்வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குளிர்பதன சேமிப்பு மையங்கள், சேமிப்பு கிடங்குகள், மின்னணு வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை அமைக்க இந்த கடன் வழங்கப்படும்.
நடப்பு ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் கோடி வீதம் கடன் வழங்கப்படும்.
அத்துடன், பயனாளிகளுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடியும், ரூ.2 கோடிவரை கடன் உத்தரவாதமும் அளிக்கப்படும். இந்த நிதியம், 10 ஆண்டுகள் செயல்படும்.
விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய்,3 தவணைகளாக வழங்கும் ‘பி.எம்.-கிசான்’ திட்டம், கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. நேற்றைய நிகழ்ச்சியில், இந்த திட்டத்தின் 6-வது தவணை தொகையான ரூ.17 ஆயிரத்து 100 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்.
8 கோடியே 55 லட்சம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.