இந்தி மொழி விவகாரம்: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை மறுப்பு

Spread the love

இந்தி மொழி தொடர்பாக நடந்த பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பி. கூறிய குற்றச்சாட்டை மறுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி, மாநில மொழி தெரிந்த அதிகாரிகளை விமானநிலையங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


புதுடெல்லி,

சென்னை விமானநிலையத்தில் இந்தி மொழி தொடர்பாக நடந்த பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பி. கூறிய குற்றச்சாட்டை மறுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி, மாநில மொழி தெரிந்த அதிகாரிகளை விமானநிலையங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. எம்.பி. கனிமொழி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் இந்தியில் கூறினார்.

பின்னர் இதுபற்றி கனிமொழி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “எனக்கு இந்தி தெரியாததால் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு விமானநிலையத்தில் வைத்து கூறினேன். அதற்கு அவர், நீங்கள் இந்தியர்தானே என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தி திணிப்பு” என்று கூறி இருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் அந்த பெண் அதிகாரிக்கு எதிராக கண்டன குரல்கள் பதிவாயின. இதற்கிடையே, விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

இந்தநிலையில், கனிமொழி எம்.பி.யின் குற்றச்சாட்டை மறுக்கும் வகையில், டெல்லியில் நேற்று மத்திய தொழில் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் இந்த விவகாரம் குறித்து கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் அதிகாரியிடம், பயணிகளிடம் மென்மையாக நடந்து கொள்வது குறித்தும், மரியாதையுடன் பேசுவதும் குறித்தும் ஏற்கனவே பயிற்சியின் போது ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது.

தென்னிந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தைச் சேர்ந்த அந்த பெண் அதிகாரி, வழக்கமாக பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக கனிமொழியுடன் இந்தியில் உரையாடி இருக்கிறார். அவர் அவதூறாக எதுவும் கூறவில்லை. இந்தி இந்திய மொழி, ஆட்சி மொழி என்றுதான் கூறி இருக்கிறார். இந்தி தெரியாததால், நீங்கள் இந்தியர்தானே? என்று ஒருபோதும் அவரிடம் கேட்கவில்லை என்று விசாரணையின் போது அந்த பெண் அதிகாரி விளக்கம் அளித்து உள்ளார்.

நிர்வாக மற்றும் நடைமுறை பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அனைத்து விமானநிலையங்களிலும் அந்தந்த மாநில மொழி தெரிந்த அதிகாரிகளையும், ஊழியர்களையும் கூடுதலாக பணியில் அமர்த்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு மூத்த அதிகாரி கூறுகையில், “நாட்டில் உள்ள பல்வேறு விமானநிலையங்களுக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பயணிகளிடம் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பேசுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவதுதான் ஏற்படுகின்றன. அப்படி ஏற்படும் போது உரிய நடவடிக்கை எடுக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page