கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு: மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Spread the love

கொரோனா நோய் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு, பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா நோய்த்தடுப்புக்காக மனிதர்களின் மீது கிருமி நாசினிகளை தெளிக்கும் வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்களின் பயன்பாடு, நிறுவுதல், தயாரிப்பு, விளம்பரங்கள் மீது தடை விதிக்கக் கோரி சட்டக்கல்லூரி மாணவர் குருசிம்ரன் சிங் நரூலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘கொரோனா நோய் தடுப்பு என்ற போர்வையில் தற்போது பயன்பாட்டில் உள்ள மனிதர்கள் மீது கிருமி நாசினிகளை தெளிக்கும் சுரங்கங்களில் கிருமி நாசினி என்ற பெயரில் மனிதர்கள் மீது புறஊதா கதிர்கள் பாய்ச்சப்படுகிறது. இந்த கிருமி நாசினி தெளிப்பு சுரங்கங்கள் உடலளவில் மட்டுமின்றி மனரீதியாகவும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கொரோனா தடுப்பு பணியில் இவை பயனற்றவை. ஆபத்து விளைவிப்பவை என்று உலக சுகாதார மையம் மற்றும் உலகின் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக மனுதாரர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு இருமுறை புகார் அனுப்பியதில் கடந்த ஏப்ரல் 18-ந்தேதி இந்த சுரங்கங்கள் தொடர்பாக மத்திய அரசு அறிவுரையை வெளியிட்டுள்ளது. ஆனால் வெறும் அறிவுரை மட்டுமின்றி இந்த சுரங்கங்களுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நடைபெற்றது.

அப்போது இந்த மனுவின் மீது பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் விவசாயத்துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page