திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா – பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடந்தது

Spread the love

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா நேற்று பக்தர்கள் ஆரவாரமின்றி எளிமையாக நடைபெற்றது.

திருத்தணி,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-வது படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதத்தில் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்பத் திருவிழா ஆகியவை வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக் கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானுக்கு தலைமுடி காணிக்கை செலுத்தி, மலர் காவடிகள் எடுத்து வழிபடுவார்கள். வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் மற்றும் ரெயில் இயக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய திருத்தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அரசு தடை விதித்தது.

இதையொட்டி, திருத்தணி முருகன் கோவில் நடை சாத்தப்பட்டு, வழிபாடு பூஜைகள் மட்டும் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் முருகப்பெருமானின் ஆடிகிருத்திகை திருவிழா மற்றும் தெப்ப திருவிழா ஆகியவை நேற்று தொடங்கியது. பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாததால் திருத்தணி நகரம் முழுவதும் ஆடிகிருத்திகை விழா கலை இழந்து காணப்பட்டன.

பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு கோவிலுக்கு செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சிலர் கோவில் படிக்கட்டுகள் வரை நடந்து சென்று தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

அதே நேரத்தில் மலைக்கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டது. அதே போல கோவிலில் உள்ள சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை மற்றும் உற்சவர் முருகப்பெருமானுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாலை கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள யாகசாலை பகுதியில் சிறிய அளவிலான நீர் தொட்டி அமைத்து அதில் சிறிய தெப்பம் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதில் மலர் அலங்காரம் செய்யப்பட்ட உற்சவரை வைத்து மிக எளிமையான முறையில் தெப்பத்திருவிழா நடத்தப்பட்டது. விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் செய்து இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page