உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்: பொதுமக்களுக்கு, எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Spread the love

‘உடல் உறுப்பு தானம் செய்திட மக்கள் முன்வர வேண்டும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

‘உடல் உறுப்பு தானம் செய்திட மக்கள் முன்வர வேண்டும்’ என்றும், அதனால் ‘இறந்த பின்பும் நாம் உயிர் வாழலாம்’ என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடல் உறுப்பு தானம் குறித்து மக்களிடம் நிலவி வரும் அறியாமையை அகற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்டு 13-ந் தேதி (இன்று) சர்வதேச உடல் உறுப்பு தான தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 12-ந் தேதி ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 5-வது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது.

ஏழை-எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு நடத்தி வருகிறது.

கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டது ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரிகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது.

மூளைத்தண்டு சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதின் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும். எனவே உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி, உடல் உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன். உடல் உறுப்புகளை தானம் செய்வோம், இறந்த பின்பும் உயிர் வாழ்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page