காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் தனியார் ரெயில்களை இயக்குபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் – ரெயில்வே நிர்வாகம் கண்டிப்பு

Spread the love

தனியார் ரெயில்கள் காலதாமதமாக சென்றாலும், முன்கூட்டியே சென்றாலும் அவற்றை இயக்கும் நிறுவனங்கள் கடுமையான அபராதம் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

 


புதுடெல்லி,

நாடு முழுவதும் குறிப்பிட்ட 109 வழித்தடங்களில் 151 அதிநவீன தனியார் ரெயில்கள் இயக்கத்தை அனுமதிக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், ரெயில்வேயில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு வழிவகுக்கும்.

ரெயில்களை இயக்கும் தனியார் நிறுவனங்களை தேர்வு செய்யும் பூர்வாங்க பணி தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, தனியார் ரெயில்களை இயக்கும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த வரைவு அறிக்கையை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தனியார் ரெயில்கள் ஆண்டு முழுவதும் நேரம் தவறாமையை 95 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும். சேர வேண்டிய ஊருக்கு 15 நிமிடத்துக்கு மேல் தாமதமாக சென்றால், அது நேரம் தவறாமையை பின்பற்றவில்லை என்று கருதப்படும்.

ரெயில்வே கட்டமைப்பை பயன்படுத்துவதற்காக, ஒரு கி.மீ.க்கு கட்டணமாக ரூ.512-ஐ ரெயில்வேக்கு தனியார் நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அந்த கட்டணத்தின் அடிப்படையில், தாமதமான நேரத்துக்கு ஏற்ப அந்த ரெயிலை இயக்கும் தனியார் நிறுவனம், ரெயில்வே துறைக்கு அபராதம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை, குறிப்பிட்ட நேரத்துக்கு குறைந்தபட்சம் 10 நிமிடத்துக்கு முன்பே அந்த ரெயில் சென்றடைந்தாலும், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும். 10 கி.மீ. தூர பயன்பாட்டுக்கான கட்டணம், அபராதமாக வசூலிக்கப்படும்.ஒரு தனியார் ரெயில், தாமதமாக சென்றடைவதற்கு ரெயில்வே துறை காரணமாக இருந்தால், அந்த தனியார் நிறுவனத்துக்கு ரெயில்வே துறை இழப்பீடு வழங்கும்.

ஒரு தனியார் ரெயில் ரத்து செய்யப்படுவதற்கு அந்த தனியார் நிறுவனம் காரணமாக இருந்தால், பயன்பாட்டு கட்டணத்தில் நான்கில் ஒரு பகுதி அபராதமாக வசூலிக்கப்படும். அதே சமயத்தில், ரெயிலை ரத்து செய்ய ரெயில்வே துறை காரணமாக இருந்தால், அதே தொகையை ரெயில்வே துறை இழப்பீடாக வழங்கும்.

ரெயில்கள் தாமதம் ஆனதற்கு ரெயில்வே துறை, தனியார் நிறுவனம் என இரண்டுமே காரணமாக இருந்தால், 70 சதவீத பொறுப்பை தனியார் நிறுவனமே ஏற்க வேண்டி இருக்கும்.

ஒருவேளை, மோசமான வானிலை, விபத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போராட்டம், கடுமையான போக்குவரத்து ஆகியவை காரணமாக ரெயில் தாமதமாக சென்றடைந்தால், இருதரப்பும் இழப்பீடு செலுத்த வேண்டியது இல்லை.

தனியார் ரெயில்களின் வருவாயை அந்த நிறுவனங்கள், ரெயில்வே துறையிடம் துல்லியமாக சமர்ப்பிக்க வேண்டும். அதை தனது பிரதிநிதிகளை அனுப்பி ரெயில்வே துறை சரி பார்க்கும்.

அப்போது, ஒரு சதவீதத்துக்கு மேல் வித்தியாசம் கண்டறியப்பட்டால், அந்த தொகையின் 10 மடங்கு தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page