தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் அமெரிக்க விசாவில் திடீர் சலுகைகள் அறிவிப்பு – இந்தியர்கள் பலன் அடைவார்கள்

Spread the love

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அமெரிக்க விசாக்கள் மீது திடீரென சலுகைகள் வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பலன் அடைவார்கள்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் தங்கி இருந்து, அந்த நாட்டின் நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்காக இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு எச்1-பி, எல்-1, ஜே-1 விசாக்களை அந்த நாடு வழங்கி வருகிறது. எச்-1பி விசா தகவல் தொழில் நுட்பத்துறையினருக்கு வழங்கப்படுகிறது.

இந்த விசா 3 ஆண்டு முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க வகை செய்கிறது எல்-1 விசாவின் கீழ் 7 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்க முடியும். ஜே-1 விசா, பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கானது.

இந்த நிலையில், உலகின் வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்காவை கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பாதித்துள்ளது. தொற்று பரவலை தடுப்பதற்காக பல மாகாணங்களிலும் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக அந்த நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது. தொழில் நிறுவனங்கள் மூடலால் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் 22-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக அமெரிக்க விசாக்கள் மீது தடை விதித்து உத்தரவிட்டார். அமெரிக்க மக்களுக்கான வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும், வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வேலை கிடைப்பதை குறைக்கும் விதத்திலும் எச்-1பி உள்ளிட்ட அமெரிக்க விசாக்கள் மீது இந்த ஆண்டு இறுதிவரை தடை விதித்து அந்த உத்தரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எச்-1பி விசாக்கள் மூலம் அமெரிக்காவில் அதிகளவில் வேலைவாய்ப்புகளை பெற்று வந்தவர்கள் இந்தியர்களும், சீனர்களும்தான். இந்த நிலையில் டிரம்பின் இந்த உத்தரவு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டில் வழக்குகளும் போடப்பட்டன.

இதற்கிடையே கடந்த சில வாரங்களாக எச்-1பி, எல்-1 மற்றும் ஜே-1 விசாக்கள் மீதான பயண தடையில் இருந்து சுகாதார துறையினருக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் பலரும் கோரிக்கை விடுத்து கடிதங்கள் எழுதினர்.

இந்தநிலையில், தகவல் தொழில்நுட்ப துறையினரும், சுகாதாரத்துறை பணியாளர்களும் பலன்பெறத்தக்க விதத்தில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் திடீரென ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், “அமெரிக்காவில் தொடர்ந்து வேலைவாய்ப்பினை மீண்டும் பெற முற்படும் ஊழியர்களுக்கு எச்-1பி மற்றும் எல்-1 விசாக்கள் மீண்டும் வழங்கலாம். ஆனால் அவர்கள் ஊரடங்குக்கு முன்னர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினார்களோ அதே நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

சுகாதார துறையில் பணி புரிந்தவர்கள் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான களப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், கணிசமான பொது சுகாதார நன்மை உள்ள பகுதிகளில் (புற்றுநோய் மற்றும் தொற்றுநோய் ஆராய்ச்சி) தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சி நடத்த விரும்புவோருக்கும் விசா தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்-1பி, எல்-1 மற்றும் சில வகை ஜே 1 விசாக்களில், விசாதாரர்களின் (கணவன், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட) குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்கா வர சலுகை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகளால் இந்தியர்கள் பெருமளவில் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், பெருவாரியாக உள்ள இந்தியர்களின் ஆதரவை பெறும் வகையில் இந்த விசா சலுகைகளை டிரம்ப் நிர்வாகம் வழங்கியுள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page