முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் – நைஜீரியா கோர்ட்டு அதிரடி

Spread the love

கப்பலை கடத்தி பிணைய தொகை பெற்ற சம்பவத்தில், முதல்முறையாக கடற்கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்து நைஜீரியா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.


அபுஜா,

நைஜீரியா நாட்டில் கினியா வளைகுடா பகுதியில் கப்பல்களை வழிமறித்து கடத்தி, அவற்றை விடுவிப்பதற்காக பெருமளவில் பிணைய தொகை கறப்பதை கடற்கொள்ளையர்கள் வழக்கமாக்கி இருந்தனர். இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று நைஜீரிய அரசுக்கு அழுத்தங்கள் வந்தன.அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கடற்கொள்ளையர்களுக்கு எதிரான சட்டம் ஒன்றை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில், அங்கு கடந்த மார்ச் மாதம் கடற்கொள்ளையர்கள் கப்பல் ஒன்றை கடத்தி 2 லட்சம் டாலர் (சுமார் ரூ.15 கோடி) பிணைய தொகை பெற்றது தொடர்பாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை போர்ட் ஹர்கோர்ட் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது கடற்கொள்ளையர்கள் 3 பேரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் குற்றவாளிகள் என கண்டு, தலா 52 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.39 லட்சம்) அபராதம் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இப்படி கடற்கொள்ளையர்களுக்கு எதிராக நைஜீரியா கோர்ட்டில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. தண்டிக்கப்பட்ட கடற்கொள்ளையர்களில் 2 பேர் நைஜீரியா நாட்டினர் என்றும் ஒருவர் வெளிநாட்டினர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இந்த தீர்ப்பை நைஜீரிய கடல் நிர்வாக மற்றும் பாதுகாப்பு அமைப்பின் தலைமை இயக்குனர் பஷீர் ஜாமோ வரவேற்றார்.

இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இது எங்கள் கடல்வழிகளில் மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிற பிற குற்றவியல் சக்திகளுக்கு ஒரு தடையாக அமையும்” என கூறினார்.

அபராதம் மட்டுமே குற்றங்களை தடுக்க போதுமானதாக அமையுமா என அவரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் “நிச்சயமாக. இப்போது திறம்பட வழக்கு தொடரவும், கடற்கொள்ளையர்களை தண்டிக்கவும் சட்டம் வந்திருப்பதே முக்கியம்” என பதில் அளித்தார். சர்வதேச கடல்சார் பணியகமும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page