இந்தியாவில் ஒரு நாளில் 64 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
புதுடெல்லி,
உலகமெங்கும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்கிறது. அமெரிக்கா அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 54.18 லட்சம் பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது. 1.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
2-ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 32.29 லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. 1.05 லட்சம்பேர் பலியாகி உள்ளனர்.
தொற்று பாதிப்பை பொறுத்தவரையில், மூன்றாவது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 64 ஆயிரத்து 553 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகி இருக்கிறது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 லட்சத்து 61 ஆயிரத்து 190 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடும்போது (66 ஆயிரத்து 999), நேற்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் குணம் அடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்தவண்ணம் இருக்கிறது. நேற்று கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 ஆக உயர்ந்து இருக்கிறது.
நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் (942) நேற்று பலி 1,007 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக வழக்கம்போல மராட்டிய மாநிலத்தில் 413 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது.
தொடர்ந்து கர்நாடகத்தில் 103, ஆந்திராவில் 82, மேற்கு வங்காளத்தில் 56, உத்தரபிரதேசத்தில் 50, பஞ்சாப்பில் 31, குஜராத்தில் 18, மத்திய பிரதேசத்தில் 17, டெல்லியில் 14, ஜார்கண்டில் 12, ஜம்மு காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் தலா 11, பீகாரில் 10 பேர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.
அதே நேரத்தில் ஒடிசாவிலும், தெலுங்கானாவிலும் தலா 9 பேரும், அசாமிலும், அரியானாவிலும் தலா 8 பேரும், புதுச்சேரியில் 6 பேரும், சத்தீஷ்காரில் 5 பேரும், கேரளாவிலும், உத்தரகாண்டிலும் தலா 3 பேரும், கோவாவிலும், திரிபுராவிலும் தலா 2 பேரும், அருணாசலபிரதேசத்திலும், அந்தமான் நிகோபாரிலும், சண்டிகாரிலும், இமாசலபிரதேசத்திலும், மணிப்பூரிலும் தலா ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை பலியான 48 ஆயிரத்து 40 பேரில் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 63 பேர் என்பது அந்த மாநில மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மராட்டியத்தை பலியில் தமிழகம் பின்தொடர்கிறது. மூன்றாவது இடத்தில் டெல்லி (4,167) உள்ளது.
மற்ற மாநிலங்களில், கர்நாடகத்தில் 3,613 பேரும், குஜராத்தில் 2,731 பேரும், ஆந்திராவில் 2,378 பேரும், உத்தரபிரதேசத்தில் 2,280 பேரும், மேற்கு வங்காளத்தில் 2,259 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,065 பேரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
ராஜஸ்தானில் 833, பஞ்சாப்பில் 706, தெலுங்கானாவில் 674, அரியானாவில் 511, ஜம்மு காஷ்மீரில் 509, பீகாரில் 426, ஒடிசாவில் 314, ஜார்கண்டில் 209, அசாமில் 169, உத்தரகாண்டில் 143, கேரளாவில் 129, சத்தீஷ்காரில் 114, புதுச்சேரியில் 102, கோவாவில் 91, திரிபுராவில் 46, சண்டிகாரில் 27, அந்தமான் நிகோபாரில் 22, இமாசலபிரதேசத்தில் 19, மணிப்பூரில் 13, லடாக்கில் 9, நாகாலாந்தில் 8, மேகாலயாவில் 6, அருணாசலபிரதேசத்தில் 4 பேர் தொற்றுக்கு இரையாகி இருக்கிறார்கள்.
தத்ராநகர் ஹவேலி தாமன் தியுவில் 2 பேரும், சிக்கிமில் ஒருவரும் மரணம் அடைந்துள்ளனர்.
பலியானவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் நாள்பட்ட பிற நோய்களுடன் கொரோனாவும் தொற்றிக்கொண்டதால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் சொல்கிறது.
இந்தியாவில் தற்போது 6.60 லட்சத்துக்கும் அதிகமான பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.