‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க முடியாது என்றும், திட்டமிட்டபடி தேர்வை நடத்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சத்து 93 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
இதேபோல் பொறியியல் படிப்புக்கு ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வு செப்டம்பர் 1-ந் தேதி முதல் 6-ந் தேதி வரையும், ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வு செப்டம்பர் 27-ந் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்களின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
நாட்டில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக இருக்கும் இந்த சமயத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தேர்வு களை தள்ளிவைக்க வேண்டும். நோய்த் தொற்று அச்சுறுத்தல் குறைந்த பிறகு நுழைவுத்தேர்வு களை நடத்தலாம். அதுவரை காத்து இருக்கலாம்.
மேலும் பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாணவர்களின் நிலையை தேசிய தேர்வு முகமை கருத்தில் கொள்ளாமல் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. எனவே நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
கொரோனாவை காரணம் காட்டி, கடந்த ஜூன் 22-ந் தேதி நடைபெற இருந்த தேசிய ஓட்டல் மேலாண்மை கவுன்சில் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்ததும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான அலக் அலோக் ஸ்ரீவஸ்தவா வாதாடுகையில், நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை என்றும், நாடு நோய்த்தொற்றில் இருந்து விடுபட்டு சாதாரண நிலைக்கு திரும்பிய பிறகே தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தேசிய தேர்வு முகமையின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில், நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைப்பது கடினம் என்றும், பாதுகாப்புடன் நடத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகளை தள்ளிவைக்க மறுத்துவிட்டனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதானே இருக்கிறது? இதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்வுகளை நிறுத்த முடியுமா? வாழ்க்கை பயணம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் பொன்னான ஓராண்டை வீணாக்க முடியாது.
இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலமும், நடப்பு கல்வி ஆண்டும் பாதிக்கப்படும். கோர்ட்டுகளை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழவில்லையா? அப்படி இருக்கும் போது தேர்வுகளை ஏன் நிறுத்த வேண்டும்?
தேசிய தேர்வு முகமை எடுத்த முடிவில் கோர்ட்டு குறுக்கிடாது. நுழைவுத்தேர்வு தொடர்பாக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்ற சொலிசிட்டர் ஜெனரலின் கருத்தை இந்த கோர்ட்டு ஏற்றுக்கொள்கிறது. எனவே தேர்வை ஒத்திவைக்க கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
இதற்கிடையே, ‘ஆயுஷ்’ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நுழைவுத் தேர்வு வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், இந்த நுழைவுத்தேர்வை தள்ளிவைக்க கோரி ஆயுர்வேத மற்றும் ஓமியோபதி டாக்டர்கள் 17 பேர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் தங்களைப் போன்ற ஏராளமான டாக்டர்கள் ஈடுபட்டு இருப்பதாவும், தாங்கள் தேர்வு மையங்களுக்கு சென்றால் டாக்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், எனவே நுழைவுத்தேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை கடந்த 11-ந் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது.