எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் – சீனா சொல்கிறது

Spread the love

எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.


பீஜிங்,

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி இந்தியா, சீன ராணுவத்தினர் இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக உயிரிழப்பு ஏற்பட்டது.

 

இந்த மோதல் காரணமாக இந்தியா-சீனா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை பிரச்சினை நீடிக்கிறது.

இந்த பிரச்சினையை தீர்க்க இருதரப்பிலும் ராணுவ ரீதியிலும், தூதரக ரீதியிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனினும் சீனா இதற்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில், “பாகிஸ்தான் எல்லை முதல் சீன எல்லை வரை எல்லா இடங்களிலும் இந்தியாவின் இறையாண்மையில் குறிவைப்போருக்கு, அவர்களுக்கு புரியும் மொழியிலேயே நமது பாதுகாப்பு படையினர் பதில் அளித்துள்ளனர். இந்தியாவின் ஒருமைப்பாடே நமக்கு உச்சபட்சமாக முக்கியம். நம்மால் என்ன செய்ய முடியும், நமது ராணுவ வீரர்களால் என்ன செய்ய முடியும் என்பதை லடாக்கில் அனைவருமே பார்த்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

மோடியின் இந்த உரையை தொடர்ந்து எல்லை பிரச்சினையை தீர்க்கவும், பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பர மரியாதையை கடைப்பிடிப்பதுதான் சரியான வழி என்று சீனா தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஷோ லிஜியான் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் உரையை நாங்கள் கவனித்தோம். நாம் இருவருமே நெருக்கமான அண்டை நாடுகள். நீண்டகால நலன் அடிப்படையில் இரு நாடுகளுமே பரஸ்பர மரியாதையையும், ஆதரவையும் கடைப்பிடிப்பதே சிறந்த வழி. நமது பரஸ்பர அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தவும், வேறுபாடுகளை களையவும், நடைமுறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், நீண்டகால அடிப்படையில் இருதரப்பு உறவை பாதுகாக்கவும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page