கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், பணியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருது வழங்கி கவுரவித்தார்.

சென்னை,
கொரோனா பேரிடர் காலத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையில் சிறப்பாக சேவை புரிந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் வாரிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். அவர், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள், பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் உத்தரவின்படி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊரகப் பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வட்டார அளவில் 431 பொறுப்பு அதிகாரிகளும், கிராம ஊராட்சி அளவில் 12 ஆயிரத்து 525 பொறுப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் களப்பணியாளர்களுக்கு, இதுவரை 31 லட்சத்து 78 ஆயிரத்து 851 முககவசங்கள் மற்றும் 8 லட்சத்து 12 ஆயிரத்து 332 கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
1 லட்சத்து 74 ஆயிரத்து 222 கட்டிடங்கள் ஊராட்சி பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. பொது இடங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்ட 43 ஆயிரத்து 280 இடங்களில் கை கழுவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில், இதுவரையில் 21 ஆயிரத்து 411 கிருமி நாசினி தெளிப்பான்கள் மற்றும் 1 லட்சத்து 52 ஆயிரத்து 113 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஊரகப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பதில் தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் மேலான தனிநபர் இல்ல கழிவறை கட்டப்பட்டதன் மூலம் தமிழகம் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற மாநிலமாக உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 522 கிராம ஊராட்சிகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, இந்த பணியில் 66 ஆயிரத்து 130 தூய்மை காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்ட முககவசங்கள், கையுறைகள் மற்றும் கை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகள் ஊராட்சி அதிகாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு களப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பெருமைபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, இயக்குனர் டாக்டர் கே.எஸ். பழனிசாமி, கூடுதல் இயக்கு னர்கள் ஆர்.மனோகர்சிங், ஜி.லட்சுமிபதி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.