முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, விநாயகர் சதுர்த்தி பண்டிகையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று எல்.முருகன் கோரிக்கை விடுத்தார்.

சென்னை,
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கும், ஊர்வலத்துக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை விலக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க., இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேயிஸ் சாலையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென்று சந்தித்து பேசினார்.
பின்னர் எல்.முருகன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விநாயகர் சதுர்த்தி பண்டிகை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிற விழா ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தற்போது நாங்களும், பொதுமக்களும் அரசாங்கம் சொல்கிற விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, கொரோனா கட்டுப்பாடுகள், ஊரடங்கு நடைமுறைகளை கடைப்பிடித்து ஊர்வலம் இல்லாமல், விநாயகர் சிலைகளை மட்டும் வைத்து வழிபட்டு கொண்டு போய் கரைப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் சொல்லி இருக்கிறோம். அவர் அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு சொல்வதாக தெரிவித்தார். முதல்-அமைச்சருடனான சந்திப்பு மிகவும் திருப்தியாக இருந்தது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பாக மட்டுமே பேசினோம். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு யார் தலைமை என்று அக்கட்சிகளிடையே விவாதம் எழுந்து உள்ள நிலையில் முதல்-அமைச்சரை, தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நேற்று திடீரென்று சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.