பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது.

புதுடெல்லி,
இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. இதை சுட்டிக்காட்டி பேஸ்புக் தளம் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரின்டே கூறுகையில், ‘உலகில் வளர்ந்து வரும் ஜனநாயகங்களில் இந்தியாவும் ஒன்று. இந்த ஜனநாயகத்துக்கு எந்த தனிநபரோ, எந்த தளமோ குழிபறிப்பதை அனுமதிக்கக்கூடாது. பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்காத பேஸ்புக்கின் செயல் நமது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை ஆகும்’ என்று தெரிவித்தார்.
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு விதிமுறைகளை பேஸ்புக் கையாளுவதாக குற்றம் சாட்டிய அவர், இது ஏற்க முடியாதது என்றும் கூறினார். அமெரிக்க பத்திரிகை கூறியுள்ள இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு போன்ற வேறு சில கட்சிகளும் வைத்து உள்ளன. ஆனால் இவற்றை பேஸ்புக் நிறுவனம் மறுத்து உள்ளது. வன்முறைகளை தூண்டுவதால் வெறுப்பு பேச்சுகளை தடை செய்திருப்பதாக கூறியுள்ள அந்த நிறுவனம், இந்த கொள்கை சர்வதேச அளவிலானது எனவும், எந்தவொரு கட்சி நலனுக்காகவோ அல்லது அரசியல் சார்ந்தோ இது அமைக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.