புதிய கல்வி கொள்கையின் பரிந்துரையின் படி மனிதவள மேம்பாட்டு துறை பெயர் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,
புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைக்க ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்தது. இக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஜூலை 29-ம் தேதி சமர்ப்பித்தது.
இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் புதிய கல்விக் கொள்கையின் பரிந்துரையை அடுத்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயர் கல்வி அமைச்சகம் என அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அரசிதழிலும் வெளியிடப்பட்டது. அதன்படி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் கல்வி அமைச்சகம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், மத்திய கல்வி அமைச்சகம் என அரசின் இணையதளத்திலும் பெயர் மாற்றாம் செய்யப்பட்டுள்ளது. இனி மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் எனவும் கல்வித்துறை இணை மந்திரி சஞ்சய் தோத்ரே எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை வரைவு அறிக்கை வலியுறுத்துகிறது. இது, இந்தி மொழியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.