ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் கிராமங்களில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

புதுடெல்லி,
பிரதமர் மோடி கடந்த ஆண்டு தனது சுதந்திர தின உரையில் ‘ஜல் ஜீவன் மிஷன்’ என்ற திட்டத்தை அறிவித்தார். நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கம்.
இந்நிலையில், இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து மத்திய ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஜல் ஜீவன் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தபோது, நாட்டின் ஊரகப்பகுதிகளில் மொத்தம் உள்ள 18 கோடியே 93 லட்சம் குடும்பங்களில், 3 கோடியே 23 லட்சம் குடும்பங்களில் (17 சதவீதம்) மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது.
இந்த ஓராண்டில், 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் அக்கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது. அங்கு சுமார் 2 கோடி புதிய குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் இந்த பணி வேகமாக நடந்து வருகிறது.
இமாசலபிரதேசத்தில் 10 லட்சம் குடும்பங்களுக்கும், காஷ்மீரில் 5 லட்சம் குடும்பங்களுக்கும், தெலுங்கானா மாநிலத்தில் 85 சதவீத வீடுகளுக்கும், கோவா மாநிலத்தில் 89 சதவீத குடும்பங்களுக்கும், புதுச்சேரியில் 87 சதவீத வீடுகளுக்கும், அரியானா மாநிலத்தில் 80 சதவீத வீடுகளுக்கும், குஜராத் மாநிலத்தில் 74 சதவீத வீடுகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத்தலைவரின் ஆதார் எண், குழாய் இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால், மோசடிக்கு வழி இல்லை.
இலக்கை நிறைவேற்ற மீதி உள்ள 13 கோடிக்கு மேற்பட்ட வீடுகளுக்கு, 4 கட்டங்களாக 2024-ம் ஆண்டுக்குள் குழாய் இணைப்பு வழங்கப்படும். முதல்கட்டமாக, அடுத்த ஆண்டுக்குள் புதுச்சேரி, பீகார், கோவா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் 100 சதவீதம் நிறைவேற்றப்படும்.
2-ம் கட்டமாக, 2022-ம் ஆண்டுக்குள் 3 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திலும், 2023-ம் ஆண்டுக்குள் 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திலும், 2024-ம் ஆண்டுக்குள் 13 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்திலும் 100 சதவீதம் குழாய் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.