மாலி நாட்டில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

பமாகோ,
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து மதரீதியான அடிப்படைவாதம் அதிகரித்தது. பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தையும் மீறி கடந்த 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 77 சதவீத வாக்குகள் பெற்று இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகளை நிறைவு செய்த இப்ராஹிம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே மாலியை முன்னர் ஆட்சி செய்த பிரான்ஸ், ஐ.நா.வுடன் சேர்ந்து ஏறக்குறை 7 ஆண்டுகள் ராணுவத்தினருடன் இணைந்து பயங்கரவாதிகளுடன் போரிட்டு அமைதியை கொண்டுவர முயற்சித்து வருகிறது. ஆனாலும் அந்த நாட்டில் பயங்கரவாதத்தை முழுமையாக ஒடுக்க முடியவில்லை.
இதனிடையே இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா பயங்கரவாதத்தை ஒடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் கூறி கடந்த 2 மாதங்களாக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலி ராணுவத்தினரில் ஒரு பிரிவினர் திடீரென கிளர்ச்சியாளர்களாக மாறி புரட்சியில் ஈடுபட்டனர். தலைநகர் பமாகோவை ஆக்கிரமித்த கிளர்ச்சி ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுக்கொண்டே சென்றனர். மேலும், ராணுவ டாங்கிகள் நகரத்தில் வலம் வந்தன.
அதனைத் தொடர்ந்து கிளர்ச்சி ராணுவ வீரர்கள், அரசு அலுவலகங்களில் புகுந்து அரசு ஊழியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பல இடங்களில் அரசு ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்து தப்பி ஓடினர். மேலும் அரசுக்கு ஆதரவான ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆங்காங்கே தடுத்து வைக்கப்பட்டனர்.
அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் கிளர்ச்சி ராணுவ வீரர்களின் செயல்களை உற்சாகப்படுத்தியதோடு அவர்களுக்கு உதவிகளை செய்தனர். திடீர் ராணுவ புரட்சியால் பமாகோ நகரில் அமைதியின்மை நிலவியது. நிலைமை மோசமானதை தொடர்ந்து கிளர்ச்சி ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி பிரதமர் மெய்கா பவ்பு சிசே அழைத்தார். ஆனால் பலனில்லை.
அதனைத் தொடர்ந்து கிளர்ச்சி ராணுவவீரர்கள் அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் மெய்கா பவ்பு சிசே ஆகியோரின் இல்லத்தை சுற்றி வளைத்து, துப்பாக்கியால் சுட்டு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபரையும், பிரதமரையும் கைது செய்துள்ளதாக ஊடகத்தினரிடம் அவர்கள் அறிவித்தனர். இதன் மூலம் அங்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இந்த நிலையில் ராணுவத்தினரின் பிடியில் உள்ள அதிபர் இப்ராஹிம் பவுபக்கர் கெய்டா நேற்று தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர், “நான் உடனடியாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன், ராஜினாமா அமலுக்கு வருகிறது. நாடாளுமன்றமும் கலைக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். இதனிடையே சதி திட்டத்தால் அதிபரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியதாக மாலி ராணுவ வீரர்களுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து மக்களின் புரட்சிக்கான தேசிய குழு என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் கிளர்ச்சி ராணுவ வீரர்கள் மாலியில் ஜனநாயக ரீதியில் புதிய தேர்தல் நடத்தப்படும் என உறுதியளித்தனர்.
மக்களின் புரட்சிக்கான தேசிய குழுவின் தலைவரும், ராணுவ அதிகாரியுமான இஸ்மாயில் வாகு “உங்களுடன் ஒன்றாக நின்று இந்த நாட்டை அதன் முந்தைய மகத்துவத்துக்கு மீட்டெடுக்க முடியும்” என கூறினார். நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்படுவதாகவும் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் கூறினார்.