ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், பாடம் படிக்க 27 சதவீத மாணவர்களிடம் நவீன செல்போனோ அல்லது லேப்டாப்போ இல்லை என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வின் மூலம் தெரியவந்து உள்ளது.

புதுடெல்லி,
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த தொடங்கி விட்டன. இதனால் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே நவீன செல்போன், லேப்டாப் உதவியுடன் பாடங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஆனால் செல்போன், லேப்டாப் வசதி இல்லாததாலும், சமிக்ஞை கிடைக்காததாலும், மின்சார பிரச்சினையாலும் ஆன்லைன் மூலம் பாடம் படிப்பதில் கணிசமான மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.)ஆய்வு ஒன்றை நடத்தியது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் என 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் வெளியான தகவல்கள் வருமாறு:-
* ஆய்வில் பங்கேற்ற மாணவர்களில் 27 சதவீதம் பேர், ஆன்லைன் மூலம் பாடம் படிக்க நவீன செல்போனோ (ஸ்மார்ட் போன்), லேப்டாப்போ தங்களிடம் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.
* போதிய மின்சார வசதி இல்லை என்றும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் 28 சதவீத மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
* 50 சதவீத மாணவர்கள் தங்களுக்கு பாட புத்தகங்கள் கிடைக்கவில்லை என்று கூறி உள்ளனர்.
* தங்களிடம் இருக்கும் பாட புத்தகங்கள் மூலம் பாடங்களை படிப்பதாக 36 சதவீத மாணவர்கள் கூறி இருக்கிறார்கள்.
* தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இணையதளத்தில் இ-பாடபுத்தகங்கள் கிடைத்த போதிலும் அதுபற்றிய விவரம் பலருக்கு தெரியவில்லை.
* ஆன்லைன் மூலம் பாடம் படிப்பது சிரமமாக இருப்பதாக 17 சதவீதம் பேர் தெரிவித்து உள்ளனர்.
* கணக்கு பாடத்தில் சந்தேகங்கள் எழும் போது கலந்துரையாடியும், ஆசிரியர்களிடம் கேட்டும்தான் தீர்க்க முடியும் என்பதால் ஆன்லைன் வகுப்பு சிரமமாக இருப்பதாகவும், இதேபோல் அறிவியல் பாடமும் சிரமமாக இருப்பதாகவும் கணிசமான மாணவர்கள் கூறி உள்ளனர்.
* ஆன்லைன் மூலம் உடற்கல்வி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பல மாணவர்களும், பெற்றோர்களும் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மேற்கண்ட விவரங்கள் ஆய்வில் தெரியவந்து உள்ளன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மேற்கொண்ட இந்த ஆய்வின் அடிப்படையில், ஆன்லைன் கல்வியை மேம்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சகம் வகுத்து இருப்பதாகவும், செல்போன், ரேடியோ, தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பதில் உள்ள சிரமங்களை போக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து உள்ளார்.