கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்ற அறிவிப்பை ஆஸ்திரேலிய பிரதமர் வாபஸ் பெற்றார்.

கான்பெர்ரா,
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் தடுப்பூசியை தங்கள் நாட்டில் உற்பத்தி செய்து வினியோகிக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
இதை நேற்று முன்தினம் (புதன்கிழமை) அறிவித்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், இந்த தடுப்பூசி முடிந்தவரை அனைவருக்கும் கட்டாயமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் இந்த அறிவிப்பை அவர் திரும்பப்பெற்றார்.
இதையொட்டி சிட்னி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் அவர், “ கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அனைவருக்கும் கட்டாயம் இல்லை” என அறிவித்தார். இந்த தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலிய மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.