ரஷியாவில் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுகிறது.
மாஸ்கோ,
உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்து இருப்பதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த 11-ந் தேதி அறிவித்து உலகை அதிர வைத்தார்.
ரஷிய பாதுகாப்பு அமைச்சகத்துடன், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து ஸ்புட்னிக்-5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ரஷியாவில் மேலும் ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, பரிசோதிக்கப்படுகிறது.
இந்த தடுப்பூசியை வெக்டர் இன்ஸ்டிடியூட் என அழைக்கப்படுகிற ரஷிய அரசின் வைராலஜி மற்றும் உயிர் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இதை தேசிய சுகாதார கண்காணிப்பு அமைப்பு, ரோஸ்போடிரெப்நட்சார் கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் கட்டமாக 14 பேருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 43 பேருக்கு போட்டு சோதிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி யாருக்கெல்லாம் போடப்பட்டுள்ளதோ அவர்கள் நலமாக இருப்பதாக ரோஸ்போடிரெப்நட்சார் கூறுகிறது. இதன் மருத்துவ பரிசோதனைகளை அடுத்த மாதம் முடித்து விட உத்தேசித்து இருக்கிறார்கள்.