ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ரஷிய துணைத்தூதர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தென்னிந்தியாவுக்கான ரஷிய துணைத்தூதர் அலியக் என்.அவ்தீவ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஷியா பல்கலைக்கழகங்களின் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரவிரும்பும் மாணவர்கள், இந்திய அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி பிளஸ்-2 வகுப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எனில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். பிளஸ்-2 வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்புக்கு இணையாக, ரஷிய மருத்துவப் பல்கலைக்கழகங்கள் எம்.டி. என்ற பெயரில் இளநிலை மருத்துவப்பட்டங்களை வழங்குகின்றன. இதை ஆங்கில மொழியில் கற்க 6ஆண்டுகளும், ரஷியா மொழியில் கற்க 7 ஆண்டுகளும் வேண்டியிருக்கும். பல்கலைக்கழகங்கள் இளநிலை மற்றும் முதுநிலை என இருமட்டங்களிலும் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவப்பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையின் முதல் கட்டப் பணிகளை தொடங்கியுள்ளன.
ரஷிய பல்கலைக்கழகங்களில் நடப்புக்கல்வியாண்டில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புக்கு சேரவிருக்கும் இந்திய மருத்துவ மாணவர்களுக்கு, ‘இணையவழியில்’ பாடங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் வரும் செப்டம்பர், அக்டோபரில் தொடங்கி நடப்புக்கல்வியாண்டு முழுவதும் நடைபெறும். ரஷிய பல்கலைக்கழகங்களில் மருத்துவக்கல்விபயில விரும்புவோர் மேலும் தகவல்பெறவும், அதற்கான முன்பதிவை தொடங்கவும் www.studyabroadedu.com என்ற இணையதளத்தையோ 9282221221 என்ற செல்போன் எண்ணையோ தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.