180 சுரங்க தொழிலாளர்களுடன் வந்த சீன விமானத்தை குட்டி நாடான பப்புவா நியூ கினியா திருப்பி அனுப்பியது.

கான்பெர்ரா,
சீனாவில் அரசு மருந்து நிறுவனமான சினோபார்ம், கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தி பரிசோதிக்க அரசின் அனுமதியை பெறுவதற்கு முன்பாக அந்த நிறுவனம், தனது ஊழியர்களுக்கு செலுத்தி சோதித்தது.
இதற்கிடையே, சீனாவின் ராமு நிக்கோ மேனேஜ்மெண்ட் என்ற சுரங்க நிறுவனம், பப்புவா நியூ கினியாவில் செயல்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட 48 சீன தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 13-ந்தேதி போர்ட் மோரஸ்பி நகருக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் பற்றி தெளிவான தகவல்கள் பப்புவா நியூ கினியா நாட்டு அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதே நேரத்தில், 48 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டிருப்பது தொடர்பாக ஒரு அறிக்கையை மட்டும் பப்புவா நியூ கினியா சுகாதார அமைச்கத்துக்கு ராமு நிக்கோ மேனேஜ்மெண்ட் நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
அதைத் தொடர்ந்து தடுப்பூசி பரிசோதனைக்கு பப்புவா நியூ கினியா அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில், மேலும் 180 சுரங்க தொழிலாளர்களை போர்ட் மோரஸ்பி நகருக்கு விமானத்தில் சீனா அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்து தெரிய வந்தபோது, அந்த விமானத்தை பப்புவா நியூ கினியா திருப்பி அனுப்பியது.
இதன் பின்னணி பற்றி அந்த நாட்டின் கொரோனா பதிலளிப்பு கட்டுப்பாட்டாளர் டேவிட் மேனிங், போர்ட் மோரஸ்பி நகரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
சீனாவின் தடுப்பூசி பரிசோதனைகள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சோதனைகள் எவை என்பதை தெரிவிக்காத நிலையில், சீன தொழிலாளர்கள் இங்கு வருகிறபோது, அவர்களால் நமது நாட்டு மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் அல்லது அச்சுறுத்தல்கள் பற்றியும் தகவல்கள் இல்லை. எனவே நமது மக்கள் மற்றும் நம் நாட்டின் சிறந்த நலன்களை உறுதிசெய்யும் விதத்தில் சீன விமானத்தை நேற்று (நேற்று முன்தினம்) முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பி அனுப்பினேன்.
எந்தவொரு கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கும் நமது நாட்டின் தேசிய சுகாதார துறை அனுமதி அளிக்கவில்லை. நமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகிற எந்தவொரு தடுப்பூசியும் தேசிய சுகாதார துறை அனுமதியை பெற வேண்டும். அதன்பின்னர் தான் தீவிரமான தடுப்பூசி சோதனை, நெறிமுறைகள், நடைமுறைகள் வழியாக செல்ல முடியும். மேலும் அந்த தடுப்பூசி, உலக சுகாதார நிறுவனத்தின் முன் அனுமதியையும் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பப்புவா நியூ கினியா நாடு ஒரு ஏழை நாடு. அங்கு 90 லட்சம் பேர் வாழ்கின்றனர். அங்கு இதுவரை 361 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டதும், 4 பேர் மட்டுமே இறந்ததும் குறிப்பிடத்தக்கது.