வீடுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, அந்த சிலையை ஒரு நபர் மட்டும் தூக்கிச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதே நாளில், கணபதி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு விதிக்கப்பட்ட தடையில் ஏதேனும் தளர்வுகளை வழங்க முடியுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டதால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதே கோரிக்கையுடன் ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, “ஏற்கனவே இந்த தடையை நீக்க கோரிய வழக்கை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது. அதேநேரம், மத நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவில்லை. விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு, நீர்நிலைகளில் கரைக்கலாம். ஆனால், பொது இடங்களில் பெரிய அளவில் சிலை வைத்து, அவற்றை ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்கத்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மெரினா கடற்கரை தற்போது மூடப்பட்டுள்ளது. அங்கு மக்கள் செல்ல அனுமதியில்லை” என்றார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்து அமைப்புகள் அனைத்தும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும், சிலைகளை வீட்டின் முன்பு வைத்து வழிபட்டு, குடும்ப உறுப்பினர்கள் அதை நீர்நிலையில் கொண்டு சென்று கரைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், தனி நபர் சிலைகளை கரைக்க தடை இல்லை. அதேநேரம், இந்த ஐகோர்ட்டு உத்தரவு, அமைப்புகளுக்கு சிலைகள் வைக்க அனுமதி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினால், கூட்டம் கூட்டமாக சிலைகளை கரைக்க செல்லத்தொடங்கிவிடுவார்கள் என்று அட்வகேட் ஜெனரல் கூறினார்.
மேலும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு வேறு விதமானது. எங்கள் முன்பு உள்ள வழக்குகளை பொறுத்தவரை கூட்டமாக ஊர்வலம் செல்லமாட்டோம். சிலைகளை கரைக்க தனி நபர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்பது தான்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சட்டம்-ஒழுங்கு என்ற 2 காரணங்களால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஊரடங்கு கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. பொது இயக்கத்துக்கு தடை இல்லை. எனவே, காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் தனி நபர் மதநம்பிக்கையை மேற்கொள்வதில் சிரமம் இல்லை. தங்களது வீட்டிற்கு முன்பும், கோவிலுக்கு முன்பும் சிலைகளை வைத்து வழிபட்டு, அதை நீர்நிலைகளில் தனி நபர்கள் கரைப்பதால் வைரஸ் பரவலும் ஏற்படாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் வராது. இவ்வாறு சிலை வைப்பது அமைப்புகள் அல்ல. தனி நபர்கள் தான். எனவே, எத்தனை பேர் செல்லவேண்டும் என்ற கட்டுப்பாடும், இதற்கு பொருந்தும்.
தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கூட்டமாக ஒரு இடத்தில் கூடுவதாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் மக்கள் பலர் நிற்பதாலும் வைரஸ் தொற்று பரவும். ஆனால் அப்படி ஒரு நிலை இந்த முறையில் இல்லை. ஒரு குடும்பத்தினர் தாங்கள் வழிப்பட்ட சிலையை கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் போட்டுவிட்டு உடனே அங்கிருந்து சென்று விடுவர். கூட்டமாகவோ, ஒரே இடத்தில் கூடவோ மாட்டார்கள்.
மேலும் களிமண்ணால் விநாயகர் சிலைகளை செய்து வைத்துள்ள கலைஞர்கள், அது விற்பனை ஆகவில்லை என்றால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். களிமண் என்பதால் அடுத்த ஆண்டுக்கும் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே இந்த கலைஞர்கள் கொரோனா ஊரடங்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றோம். தனி நபர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம். அதன்பின்னர் அந்த சிலைகளை, கோவில்களுக்கு முன்பு வைக்கலாம் அல்லது ஒரு நபர் மட்டும் அந்த சிலையை தூக்கிச்சென்று நீர்நிலைகளில் கரைக்கலாம். அதேநேரம், சென்னையில் சாந்தோம் முதல் நேப்பியார் பாலம் வரையில் உள்ள பகுதியில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது.
இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டும்தான். அமைப்புகளுக்கு கிடையாது. இதில் ஏதாவது மீறி சம்பவம் நடந்தால், தமிழக அரசு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.