தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாது காக்கப்படும் என்றும், ரவுடிகளை தமிழக அரசு ஒடுக்கும் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கொரோனா நோய் தடுப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ்காரர் ஒருவர், ரவுடி வெடிகுண்டு வீசியதில் பலியானார். இதனால் தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என பேசப்படுகிறது. இதற்கிடையே சென்னையில் ரவுடி என்கவுண்ட்டரில் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கை என எடுத்துக்கொள்ளலாமா?
பதில்:- இந்த அரசு ரவுடிகளை ஒடுக்கும் அரசு. தமிழகம் சட்டம்-ஒழுங்கை பேணி காப்பதில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. ஒரு சில சம்பவத்தை வைத்து எடைபோடக் கூடாது. ஒட்டுமொத்தமாக பார்க்க வேண்டும். தமிழகத்தில் ரவுடித்தனம் செய்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?
பதில்:- மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது காவல்துறை. அவர் சொன்னது வேடிக்கையாக உள்ளது. அவர் எந்த விதத்தில் சொன்னார் என்பது தெரியவில்லை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது திருவாரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் குடும்ப சண்டையில் 3 பேர் எரித்துக்கொல்லப்பட்டார்கள். அப்போது சட்டம்- ஒழுங்கு எங்கே போனது? ஒரு சில சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்தமாக சட்டம்- ஒழுங்கு சரியில்லை என சொல்லக்கூடாது.
கேள்வி:- கொரோனா ஆய்வு கூட்டங்களில் தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுவதாக துரைமுருகன் குற்றம்சாட்டி உள்ளாரே?
பதில்:- இது சோதனையான நேரம். கொரோனா நோய் பரவலை தடுக்க மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறேன். மேலும் அரசு அறிவித்த திட்டங்களின் நிலையையும் கேட்டறிந்து வருகிறேன். இந்த கூட்டத்துக்கு வர வேண்டாம் என யாரையும் தடை செய்வது இல்லை. இந்த கூட்டத்தில் கூட தி.மு.க. எம்.பி. பங்கேற்று உள்ளார். யாராக இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுதான் வரவேண்டும். நானும் பரிசோதனை செய்து கொண்டு தான் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்கிறேன். மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். பரிசோதனை செய்யாமல் வந்தால், அதன் மூலம் நோய் பரவினால் மாவட்ட நிர்வாகம் ஸ்தம்பித்து விடும். நோய் கட்டுப்பாட்டில் உள்ளதா? என்பதை அறியவும், ஆலோசனைகளை வழங்கவும்தான் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.
கேள்வி:- தமிழகத்தில் 2-வது தலைநகர் தொடர்பாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்களே?
பதில்:- அரசின் நிலைபாட்டை ஏற்கனவே தெரிவித்து விட்டேன். திரும்ப, திரும்ப சொல்வது முதல்-அமைச்சரின் வேலை இல்லை. யார் வேண்டுமானாலும் கோரிக்கை வைக்கலாம். அதற்காகத்தான் எம்.எல்.ஏ., எம்.பி.க்களை தேர்வு செய்கிறார்கள். நான் மத்திய அரசுக்கு நிறைய கோரிக்கைகளை வைக்கிறேன். எல்லாவற்றையும் நிறைவேற்றி விடுகிறார்களா? எதை நிறைவேற்ற முடியுமோ? அதைத்தான் நிறைவேற்றி தருகிறார்கள். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை வைப்பது என்பது அவர்கள் சார்ந்த மாவட்டத்துக்கு செய்யும் கடமை.
கேள்வி:- அமைச்சர்கள் கருத்து தெரிவிக்கக்கூடாது என அ.தி.மு.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்களே?.
பதில்:- கட்சியின் கருத்தைத்தான் சொல்லக்கூடாது என சொல்லி உள்ளோம். நல்ல திட்டங்களை சொல்ல வேண்டாம் என கூறவில்லை. மக்களுக்கு நல்லது செய்யத்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.
கேள்வி:- விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தளர்வு வழங்கப்படுமா?
பதில்:- ஏற்கனவே பதில் அளித்து விட்டேன்.
கேள்வி:- இதுதொடர்பாக பா.ஜனதாவைச் சேர்ந்த எச்.ராஜா காட்டமாக பதில் அளித்து உள்ளாரே?
பதில்:- அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பதில் சொல்லி விட்டார்.
கேள்வி:- கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மராட்டிய மாநிலத்தில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எப்போது பொது போக்குவரத்து தொடங்கும்?
பதில்:- கொரோனா வைரஸ் பரவலை தடுக்கத்தான் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இ-பாஸ் முறை இருப்பதால்தான் தொற்று யாரிடம் இருந்து பரவி உள்ளது என்பதை அறிய முடிகிறது.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சரியான நேரத்தில் தண்ணீரை பகிர்ந்து கொடுத்ததால், இந்த ஆண்டு பாசனவசதி பெறும் நிலத்தின் பரப்பு 26 லட்சத்து 86 ஆயிரம் ஏக்கராக உயர்ந்து உள்ளது. கடந்த ஆண்டு 16 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் நிலம் மட்டுமே பாசனவசதி பெற்று இருந்தது.
காவிரி, பொன்னியாறு, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டம் 1958-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். இத்திட்டத்தில் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் 132 கி.மீ., நீளத்துக்கு கால்வாய் வெட்ட வேண்டும். இதற்கு தற்போது ரூ.8 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இந்த திட்டம் அரசின் ஆய்வில் உள்ளது.
நாமக்கல் மாவட்டம் அணிச்சம்பாளையம், கரூர் மாவட்டம் புஞ்சை புகளூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.406 கோடியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையமும், நாமக்கல்லில் நவீன கோழியின நோய் பரிசோதனை மையமும் அமைக்கப்படும். புதிய கல்வி கொள்கை தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கைகள் முழுமையாக வந்த பிறகுதான் முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.